சித்தர்களைப் புரிந்துகொள்வது எளிது. ஒரு குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவது போலவே எளிது. ஆனால் இன்னும் தலை நிற்காத குழந்தைக்குப் பின் கழுத்தில் ஒரு கை கொடுத்துத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.
அத்தியாயம் 1
சத் என்றால் உண்மை. ஆனந்தம் என்ற வார்த்தைக்கு விளக்கம் அவசியமில்லை. கொழுக்கட்டையின் மையத்தில் இருக்கும் இனிப்புப் பூர்ணத்தை போல அது என நடுவில் சித்?
சித்தம் என்ற தன்மையை உயர் நிலைக்கு எடுத்துச் சென்று, உண்மை என்ற சத் நிலையைத் தங்கள் சித் நிலையுடன் இணைத்து ஆனந்தம் கொள்ளும் வழிமுறையைக் கண்டவர்கள் சித்தர்கள். தானே சித் என்ற நிலையில் இருப்பதால் சித்தன். உடலைக் கடந்த உள் நிலையின் மூலமாக இருக்கும் சித்தத்தில் லயம் கொண்டவர்கள் சித்தர்கள்.
இப்படியெல்லாம் சொன்னால் லேசாகத் தலை சுற்றலாம். உண்மையில் சித்தர்களைப் புரிந்துகொள்வது எளிது. ஒரு குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவது போலவே எளிது. ஆனால் இன்னும் தலை நிற்காத குழந்தைக்குப் பின் கழுத்தில் ஒரு கை கொடுத்துத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். அவ்வளவுதான்.
நம்மிடம் ஒரு குணம் உண்டு. புரியாதவற்றை இரண்டு விதமாக அணுகுவோம். ஒன்று, நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட சக்தி என்று தலைமேல் வைத்துக் கொண்டாடுவது. அல்லது, எல்லாம் ஏமாற்று வேலை என்று காலடியில் போட்டு மிதிப்பது.
இரண்டுமே தேவையில்லை. புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் முக்கியம். முயற்சியில் நேர்மை முக்கியம். சித்தர்களையே எடுத்துக் கொள்ளுங்கள். பொதுவில் உள்ள பிம்பம் என்ன? சித்தர்கள் என்பவர்கள் அதிசயம் செய்பவர்கள் அல்லது மாய வித்தை செய்பவர்கள். இப்படித்தான் பலர் நினைக்கிறார்கள். அவர்கள் என்ன பேசியிருக்கிறார்கள், எதைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பதில் இருந்து தொடங்க வேண்டும் என்பதைக் கூடச் சிந்திக்க மறந்துவிடுகிறோம். சில சித்தர்கள் கடவுள் வழிபாட்டைக் கோனார் கையேடு போல விளக்குவார்கள். இன்னும் சிலரோ, நட்ட கல்லும் பேசுமோ என வழிபாட்டையே பரிகசிப்பார்கள். இவரும் சித்தர், அவரும் சித்தர் என்றால் எது சித்து? யார் சித்தர்?
மிக மிக எளிமைப்படுத்திச் சொல்வதென்றால்..
Excellent
ஆவலுடன். தொடருவோம்.