மாதம் ஒரு முறையாவது நாளிதழ்களில் பார்க்கிறோம். அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு. இந்த அபாயகரமான அபத்தம் உலகில் வேறெங்கும் நடப்பதில்லை. அமெரிக்காவில் மட்டும்தான் அடிக்கடி நடக்கிறது.
மாணவர்கள் பள்ளிக்கூடம் சென்றால் படித்து, கல்வியறிவு பெறுவார்கள். ஆனால் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு சாவார்களா? அதைப் பார்த்து, ‘துப்பாக்கிகள் கொல்வதில்லை; மனிதர்கள்தான் கொல்கிறார்கள். எனவே மாணவர்களுக்கு புத்தி சொல்ல வேண்டுமே தவிர துப்பாக்கிகளைப் பறிக்கக் கூடாது’ என்று ஆட்சியாளர்கள் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? அமெரிக்காவில் தற்போது நடப்பது அதுதான். ரைஃபிள் கிளப்புகளின் கைப்பாவையாகவே ஆட்சியாளர்கள் மாறியிருப்பதுதான் இதற்கு மூலக் காரணம் என்ற குற்றச்சாட்டு நாலாபுறம் இருந்தும் பெருகியபடி உள்ளது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை ஒவ்வொருவரும் துப்பாக்கி வைத்துக் கொள்வது ஜனநாயக உரிமை. விவரம் தெரியத் தொடங்கும் வயதிலேயே குழந்தைகளுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சியைத் தந்து விடுகிறார்கள். இதற்காகவே இங்கே பயிற்சி மையங்கள் நிறைய உள்ளன. துப்பாக்கிச் சுடுவதில் பிரிட்டனுடன் போட்டிபோட பல ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சங்கம், இன்று அமெரிக்கத் தேர்தல்களையே புரட்டிப்போட வல்லதாக, அரசின் கொள்கைகளை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி மிக்கதாக வளர்ந்திருக்கிறது. பல குடியரசு வேட்பாளர்களும், சில ஜனநாயக வேட்பாளர்களும் தேர்தலுக்குத் தேர்தல் அவர்களது ஆதரவையும் நன்கொடையையும் பெற்றே வெல்கிறார்கள். பதவியேற்றதும், துப்பாக்கிச் சங்கங்களுக்கு சாதகமாகச் சட்டதிட்டங்களை அமைத்துக் கொடுத்துவிடுகிறார்கள்…