2. என்ன செய்யப் போகிறாய்?
சென்னைக்கு வந்து உதவி இயக்குநராக ஒரு வாய்ப்பும் கிடைத்துவிடுகிறது. கையோடு செய்து முடிக்க வேண்டிய முதல் பணி, தங்குவதற்கு உருப்படியாக ஓர் இடம் தேடிக் கொள்வது என்று பார்த்தோம்.
இது அவ்வளவு பெரிய விஷயமா என்றால் இதைவிடப் பெரிய விஷயம் வேறு எதுவும் கிடையாது.
ஏனெனில், பெரும்பாலான உதவி இயக்குநர்கள் கம்யூன் வாழ்க்கையையே தேர்ந்தெடுப்பார்கள். கிடைக்கிற அல்லது கிடைக்காமல் போகிற மிகக் குறைந்த சம்பளத்தைக் கொண்டு பிறகு மதன மாளிகையிலா குடியிருக்க முடியும்? இங்கே அங்கே பீறாய்ந்து நான்கு நண்பர்களைத் தேடிக்கொண்டு, அவர்களுடன் ஒட்டிக்கொள்வதுதான் எளிய வழி.
தவறில்லை. தொண்ணூற்றொன்பது சதவீதம் பேர் இதைத்தான் செய்கிறார்கள். வேறு வழியும் இல்லை என்றாலும் இப்படிப்பட்ட அச்சுவெல்ல அறைகளில் நிற்க, உட்காரக் கூட முடியாத இட நெருக்கடியில் வாழ்வோர், இயக்குநர் வாய்ப்புக் கிடைக்கும் வரை அப்படியே காலத்தை ஓட்டி விடலாம் என்று நினைப்பது சரியாக இருக்காது.
ஏனெனில், இருப்பிடம் என்பது பெரும்பாலும் மனநிலையுடன் தொடர்பு கொண்டது. அநேகமாக உதவி இயக்குநராக வேலை பார்க்கும் காலம் முழுவதும் பதற்றமும் அச்சமும் கவலையும் அவமானங்களும் பசியும் சோர்வும் மனத்தை ஆட்கொண்டபடியேதான் இருக்கும். வேலை முடித்து வீட்டுக்கு வரும்போது, அந்தச் சூழலாவது சிறிது ஆசுவாசம் தர வேண்டும்.
இல்லாவிட்டால் உருப்படியாக உட்கார்ந்து சிந்திக்கவோ, எழுதவோ முடியவே முடியாது. எல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். தொண்ணூறு சதவீதம் பேர் தோற்றுப் போவதன் காரணம், இந்த ‘அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்’ என்கிற மனோபாவம்தான்…
Add Comment