பசித்தால் சாப்பிடுகிறோம். ருசியாக இருந்தாலும் சாப்பிடுகிறோம். பிடித்ததை உண்கிறோம். கிடைப்பதை உண்கிறோம். ஆனால் உண்பதற்குச் சில ஒழுக்க விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொன்னால் உடனே ஒப்புக்கொள்வோமா? சரவண பவனிலோ, சங்கீதாவிலோ கேட்க மாட்டார்கள். இதே ஒரு நட்சத்திர ஓட்டலுக்குச் சென்றால் நம் இஷ்டத்துக்கு நக்கியும் உறிஞ்சியும் உண்ண முடியுமா? நமக்கெல்லாம் சாப்பிடும்போது மேலே போட்டுக்கொள்ள ஒரு துண்டைக் கொடுத்தாலே சிறு பதற்றம் வந்துவிடும். ஆனால் உண்ணும் ஒழுக்கத்தில் ராணுவத்தன்மை கடைப்பிடிக்கும் தரப்பு உலகெங்கும் உண்டு.
ஒழுக்கம், உணவிற்கான மரியாதை. அதையும் தாண்டி அது இறுக்கமாகப் பின்பற்றப்படுகிறது. அப்போது மிகவும் நெருக்கடியான சூழலும் உருவாகி விடுகிறது. அந்த இறுக்கமான உணவின் நியதிகளால் சுவையான உணவின் ருசியைக்கூட அனுபவிக்க முடியாமல் போய் விடுவதுண்டு. சில அரச குடும்பங்களில் இந்த உணவிற்கான விதி இன்னும் மோசமாகப் பின்பற்றப்படுகிறது.
இங்கிலாந்து அரச குடும்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள். யாரேனும் ஒருவர் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துடன் உணவருந்த அழைக்கப்பட்டால், அதைவிடக் கொடுமை அவருக்கு வேறு இராது…