3. உண்மையும் உப்புமாவும்
“ராஜேஷ் பச்சையப்பன் உள்ள வாங்க.”
ஆபீஸ் ரூமை அடையாளம் தெரியாமல் போய்விடுமோ என்று போர்டு அடித்து மாட்டியிருந்த அறைக்குள் இருந்து குரல் வந்தது.
உடனே கைவசம் கொண்டு சென்றிருந்த என் ‘ரெஸ்யூம்’ கோப்புடன் வேகமாக எழுந்து உள்ளே சென்றேன்.
அந்த அறையில் இரண்டு பேர் இருந்தார்கள். அதில் ஒருவரது முகம் எனக்குப் பரிச்சயமானது. திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் வருவார். பார்த்திருக்கிறேன். பிற்காலத்தில், நடிப்பது மட்டுமல்லாமல் அவர் வேறு என்னென்ன வேலைகள் செய்பவர் என்று தெரிந்துகொண்டது இங்கே அவசியமில்லை. அவருடன் இருந்த இன்னொரு நபரை எனக்கு அறவே தெரியாது.
“இவர் தான் டைரக்டர். — இன்னன்ன திரைப்படங்கள் இயக்கி இருக்கிறார்” என்று அவரை இவர் அறிமுகப்படுத்தினார். அந்தப் படங்களில் ஒன்றின் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை.
வழக்கமான நான்கைந்து கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால்,
“என்ன படிச்சிருக்கீங்க?”
“வாசிப்பு பழக்கம் இருக்கா?”
“தமிழ் தட்டச்சு தெரியுமா?”
“பிடிச்ச சினிமா என்னென்?”
“பிடிச்ச இயக்குனர் யாரு?”
என்ற கேள்விகள் எல்லாம் இல்லை.
கல்யாண வீட்டில் பார்க்கும் தூரத்து சொந்தக்காரர் பதின் பருவத்தினரைக் கேட்கும் கேள்விகளே கொஞ்சம் வேறு மாதிரி கேட்கப்பட்டன. (அப்புறம் அம்மா அப்பாலாம் என்ன பண்றாங்க?)
Interesting narration