4. எல்லை நிலம்
சென்ற அத்தியாயத்தில் கிரீமிய யுத்தத்தைப் பார்த்தபடியால் இப்போது அதன் தொடர்ச்சியைத்தான் கவனிக்க வேண்டும் என்று சட்டமா இருக்கிறது? நமக்குத் தெரிய வேண்டியது உக்ரைனின் வரலாறு. அம்மண்ணை மையமாக வைத்து நடைபெற்ற யுத்தங்களின் வரலாறு. சரித்திரம் முழுதும் அத்தேசம் எப்படி எல்லாம், யாரால் எல்லாம் பழி வாங்கப்பட்டிருக்கிறது என்கிற வரலாறு. இது முழுதாகத் தெரிந்தால்தான் ரஷ்யா என்கிற பிரம்ம ராட்சதனுக்கு உக்ரைன் என்னும் கொசு எப்படி நான்கு மாதங்களாகத் தண்ணி காட்டிக்கொண்டிருக்கிறது என்பது புரியும்.
1853-இல் தொடங்கி மூன்றாண்டுகள் நடைபெற்ற கிரீமிய யுத்தத்தில் உக்ரைன் சிக்கியது அதன் விதி. சம்பந்தமே இல்லாமல் ரஷ்யாவும் அதன் எதிரி தேசங்களும் மோதிக் கொண்டதற்கு உக்ரைன் பலியானது. அதன் நிலப்பரப்பு பல பேரால் பிரித்துத் தின்னப்பட்டது. ஆனால் அந்த யுத்தத்தின் தொடர்ச்சியாக உக்ரைனிய மக்களுக்கு ஒரு பாடம் கிடைத்தது. அடி பணிந்து போவதல்ல; அதிகார வர்க்கத்தை எதிர்த்து நின்று நாலு கேள்வி கேட்பதுதான் ஏதாவது நல்லது நடக்க வழி செய்யும். நல்லதே நடக்காது போனாலும், ஆள்பவர்கள் நம்மைப் பொருட்படுத்தி கவனிக்கவேனும் செய்வார்கள் அல்லவா?
Add Comment