பேச்சுதான் பெரிய பச்சையப்பாஸ் ரெளடி மாதிரி. அட பிஸ்கோத்து நீ இதுவரைக்கும் பீர் கூடக் குடிச்சதில்லையா?
4 முதல் சம்பளம்
1964 முதல் 1968 வரை மெட்ராஸில் இருந்த நான்கு வருடங்களில் அபூர்வமாக ஒன்றிரண்டு மாதங்களின் சம்பளத் தேதிகளில் ஆரிய பவன் ஓட்டலில் இருந்து பாதுஷா ஜாங்கிரி என அப்பா ஸ்வீட் கொண்டு வந்திருந்தது அவனுக்கு நன்றாக நினைவிருந்தது.
பாண்டிச்சேரிக்குப் போனபிறகு, அவர் இனிப்பு என்று எதையாவது எப்போது கொண்டு வந்தாலும் அன்று அலுவலகத்தில் யாருக்கோ ரிடையர்மெண்ட் பார்ட்டி என்று அர்த்தம் என்பது கொஞ்சம் வளர்ந்த பிறகுதான் புரிய ஆரம்பித்தது. ரிடையர்மெண்ட் எப்போதுமே மாதக் கடைசி நாளன்றுதான் இருக்கும். அரசாங்க சம்பளமும் மாதக் கடைசி நாளன்றுதானே.
நாலும் தெரிய ஆரம்பித்த பின், எதையும் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று எடுத்துக் கொள்வதைத் தவிர்த்து, எல்லாவற்றையும் குறுக்கு வெட்டாக அறுத்து யோசிக்கும் புத்தியும் வந்த பிறகு, பார்ட்டிகளில் கிடைக்கும் இனிப்பை வீட்டுக்குக் கொண்டு வருவதற்குக் காரணம் அன்போ பாசமோ அல்ல; கையில் வருகிற மொத்தத்தையும் குதிரை ரேசில் விட்டுவிட்டு, சம்பளத் தேதியன்று ஒரு ஸ்வீட்கூட வாங்கி வரத் துப்பில்லை என்று அடி வாங்கி அரற்றும் அம்மாவின் வாயை அடைக்கக் கடைப்பிடிக்கும் குயுக்தி என்பது பிடிபடத் தொடங்கிற்று. சுருட்டிப் பொட்டலமாகக் கொண்டு வர எப்போதுமே பார்ட்டிகளில் கொடுக்கப்படும் பேப்பரை அப்படியே பயன்படுத்துகிறாரே, அந்த அளவிற்கா நமக்கு அறிவில்லை என நினைத்துக்கொண்டிருக்கிறார் என்று உள்ளூர சிரித்துக் கொள்ள ஆரம்பித்தான்..
Add Comment