7. கடிதங்களில் வாழ்தல்
1905 அக்டோபர் 19ஆம் தேதி. மோதிலால் இந்தியா திரும்ப ஆயத்தமாகியிருந்தார். அதற்கு முன்பாக எல்லா வேலைகளையும் முடித்தாக வேண்டியிருந்தது. அதனால் ஓட்டலுக்குத் திரும்ப நள்ளிரவாகி விட்டது. மறுநாள் கப்பலில் புறப்பாடு. அந்த அவசரத்திலும் மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
‘நான் சொன்னதெல்லாம் உனக்கு நினைவில் இருக்கும். நீ படிப்பில் கவனம் செலுத்துவது. உனது உடல் நலத்தில் அக்கறை காட்டுவது. விளையாட்டுக்களில் ஈடுபடுவது. இவையெல்லாம் உனக்கு மட்டுமல்ல. எங்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதே. இந்த உலகத்தில் எங்களுக்கு இருக்கும் விலை மதிப்பில்லாத பொக்கிஷம் நீ. உன்னை இங்கிலாந்தில் விட்டுவிட்டு, நாங்கள் இந்தியா திரும்புகிறோம். பிரிவுத்துயரம் எங்களை வாட்டுகிறது. அது உன்னுடைய நல்லதற்கு. அதை முன்னிட்டே எங்களுக்கு நாங்கள் ஆறுதல் சொல்லிக் கொள்கிறோம். இது உன்னை ஒரு முழுமையான மனிதன் ஆக்குவதற்கான அடித்தளம். என்னிடம் நிறைய சொத்து இருக்கிறது. ஆனால், இருக்கும் சொத்துடன் இன்னமும் சம்பாதித்து எல்லாவற்றையும் உனக்குக் கொடுக்கிறபோது, உனக்கு உயர்தரமான கல்வி என்கிற செல்வத்தை கொடுத்திருக்க வேண்டும். இல்லாது போனால் நான் ஒரு பாவியாவேன். நீ எப்போதும் என்னுடன் இருக்கவேண்டும் என்பது சுயநலம். அப்படி ஒரு காரியத்தை ஒரு போதும் நான் செய்ய மாட்டேன். உடல் ரீதியாகவே நாம் பிரிந்து வாழ்கிறோம். உணர்வுப் பூர்வமாகப் பார்த்தால் நமக்குள் பிரிவே கிடையாது. நான் உன் மீது எத்தனை பாசம் வைத்திருக்கிறேன். அது இப்போதுதான் எனக்குப் புரிகிறது.’
Add Comment