7. தத்த நாத்
அது மார்கழி மாதத்தின் புலர் காலை. சூரியனைவிடப் பிரகாசமான தேஜஸ் உடைய முகத்தைக் கொண்ட மா அனுஷியா, ஆசிரமத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். தனது நியம அனுஷ்டானங்களை முடித்துவிட்டு அத்திரி மஹரிஷி வெளியே உலாவச் சென்று விட்டார்.
வேலையில் இருந்த அனுஷியா, தனக்குப் பின்புறம் யாரோ வந்து நிற்பது போல உணர்ந்து, திரும்பிப் பார்த்தாள்.
எதிரே மூன்று ரிஷிகள். அத்திரி மகரிஷியைப் பார்க்க எப்போதும் யாராவது வந்தபடியேதான் இருப்பார்கள். எனவே அனுஷியா அவர்களை வரவேற்று அமரச் செய்தாள். தனது கணவர் திரும்பி வரும் வரை காத்திருக்க வேண்டினாள். அதற்குள் அவர்களுக்கு உணவு தயாரித்து விடுவதாகச் சொல்லி சமையலறைக்குச் சென்றாள்.
அந்த மூன்று ரிஷிகளும் பார்க்க ஒரே போல இருந்தனர். பேசும் பொழுதும் ஒரே விதமான முக பாவனை இருந்தது. அதைச் சிந்தித்தபடி உணவைத் தயாரித்து முடித்து அவர்களைச் சாப்பிட அழைத்தாள் அனுஷியா.
அதுவரை சும்மா இருந்த ரிஷிகள், அப்போது ஆரம்பித்தார்கள். ‘நாங்கள் மூவரும் வினோதமான விரத அனுஷ்டானங்களைப் பின்பற்றுபவர்கள். எங்களுக்கு விருந்து அளிப்பவர் உடைகள் அணியாமல் பிறந்த மேனியாக உணவு படைத்தால் மட்டுமே சாப்பிடுவோம்’ என்றனர்.
Add Comment