துபாய் என்றால் பாலைவனம். துபாய் என்றால் வானுயர்ந்த கட்டடங்கள். துபாய் என்றால் வண்ண மயம். ஷேக்குகள். பெரும் பணம். எண்ணெய். ஒட்டகம். வேறென்ன?
உங்களுக்கு இங்கே வேறொரு துபாயைக் காட்டப் போகிறோம்.
வடிவேலு வசித்து வந்த துபாய் மெயின் ரோடு, துபாய் குறுக்கு சந்திலிருந்து இந்த இடத்துக்குச் சென்று சேர சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகும். துபாயில் இருந்து ஷார்ஜாவைக் கடந்து நான்கு வழிச் சாலையில் நூற்று இருபது கிலோ மீட்டர் வேகத்தில் வண்டியை விரட்டினால் புஜோவை அடையலாம். இது ஐக்கிய அரபு தேசங்கள் என்று அழைக்கப்படும் ஏழில் ஒன்று. துபாய் போலப் பரபரப்பான பிராந்தியமல்ல.
சாலை என்பது பெரும்பாலும் காலியாக இருக்கும். இரு புறமும் கடலைவிடப் பெரிதெனத் தோன்றும் பாலை நிலப் பரப்பு. நடு நடுவே அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காய்ந்த காஃப் மரங்கள். மரங்களின் கீழ்ப் பகுதிகளை ஒட்டகங்கள் சாப்பிட்டு விடுகின்றன. ஆகவே அவை முடி வெட்டிய தோற்றம் கொண்டிருக்கின்றன.
கண்ணுக்கெட்டிய தொலைவு வரை வெறும் மணல் பரப்புதான். நடுவே ரிப்பன் போல அலைபாயும் சாலையில் வண்டி போய்க்கொண்டே இருந்தது. சாலைக்கும் பாலைவனத்திற்கும் நடுவே முடிவற்ற நீண்ட வேலி போடப்பட்டிருந்தது. ஒட்டகங்கள் சாலைகளுக்கு வராமல் இருக்க வேண்டும். அதற்காகத்தான் சாலை நெடுக இந்த வேலிகள்…
Add Comment