8. இருபத்து நான்கு குரு
குரு என்பவர் சர்வாதிகாரி இல்லை. அவரிடம் எதையும் கேட்கக் கூடாது. அவர் சொல்லுவதை செய்துவிட்டுச் செல்ல நாம் அவரது அடிமையும் கிடையாது. குரு என்பவர் நாம் அடைய வேண்டியதை முன்பே அடைந்தவர். அவர் காட்டும் வழியில் நாம் செல்லும் பொழுது பயணம் சுகமாகும். குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே உள்ள உறவு அவ்வளவு எளிதில் விளங்காது. ஆழ்ந்த புரிதல் தேவைப்படும்.
குருவிடம் இப்படி நடக்க வேண்டும் அப்படி நடக்கக் கூடாது என்ற விதிமுறையுடன் அனுகினால் அது நமது ஆணவத்தால் உருவான விதிமுறைகள் என்பதால் அனைத்தும் தகர்ந்துவிடும். குருவின் சாந்நித்யத்தில் சிஷ்யன் தாமாக பக்தி நிலைக்கு வந்து எல்லையை வகுத்துக்கொள்வான். குருவின் மேல் இருக்கும் பக்தியால் உருவாகும் இயற்கையான செயல்பாடுகள் மட்டுமே எப்பொழும் நிலைக்கும்.
இந்த உலகில் பல்லாயிரக் கணக்கான குரு சிஷ்யர்கள் இருந்தாலும் ஒரு குருவிற்கும் சிஷ்யனுக்கும் ஆன உறவு என்பது தனித்துவமானது. கட்டைவிரல் ரேகையைப் போல அனைவருக்கும் இருக்கும்; ஆனால் நமக்கு இருப்பது போல வேறு ஒருவருக்கு இருக்காது.
குருவாக முன்வந்து எனக்கும் எனது குருவுக்கும் நடந்த விஷயம் இது எனச் சொல்லும் பொழுது அந்தக் கதையைக் கேட்கலாமே ஒழிய சிஷ்யன் உங்கள் குரு உங்களை எப்படித் தேர்ந்தெடுத்தார், என்ன விளைவுகளை உங்கள் வாழ்வில் நிகழ்த்தினார் எனக் கேட்பது தவறு. தாயிடம் சென்று அவளது முதல் இரவை பற்றிக் கேட்போமா? அப்படிப்பட்டது இது.
Add Comment