9. குதிரைகள் வேண்டாம், நாங்கள் இழுக்கிறோம்!
அலகாபாதில் இருந்து வெளியாகிக் கொண்டிருந்தது பயனீர். அந்த ஆங்கில தினசரியின் ஆசிரியர், உரிமையாளர் இருவரும் ஆங்கிலேயர்கள். அவர்கள் வெளியிடும் செய்திகளில் ஐரோப்பியக் கண்ணோட்டம்தான் நிறைந்திருக்கும். இந்திய மக்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள் என்று ஜவஹர் நினைத்தார். எனவேதான் பயனீரை அனுப்ப வேண்டாம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
அதே சமயம் டைம்ஸ் நாளிதழில் இந்தியாவில் நடந்து கொண்டிருந்த அன்னியப் பொருட்கள் பகிஷ்கரிப்பு குறித்த செய்தி வந்தது. காஷ்மிரில் நடந்த அன்னியப் பொருட்கள் பகிஷ்கரிப்பு பற்றி அதில் விரிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் படித்தபோது ஜவஹருக்கு மிகுந்த வியப்பு. தனி சமஸ்தானமான காஷ்மிரிலேயே எவ்வளவு தீவிரமான ஆங்கிலேயே எதிர்ப்பு? அங்கேயே மக்களிடம் இந்த உணர்வு என்றால் இந்தியாவின் மற்ற பகுதிகள் எப்படியிருக்கும்?
மோதிலால் நேருவின் கடிதங்கள் மூலம் அவரால் இந்திய தேசிய காங்கிரசில் நிலவும் மிதவாதிகள், அ-மிதவாதிகளின் போக்கு பற்றி அறிய முடிந்தது. அதில் ஜவஹருக்குச் சற்றே ஏமாற்றம். இந்தியாவின் சுதந்திரத்தை இலட்சியமாகக் கொண்டு ஒருமித்துக் குரல் கொடுக்க வேண்டியவர்கள். இப்படி பிளவுபட்டிருப்பது எவ்வளவு பெரிய வேதனை. இந்தப் பிரிவினையால் அவர்களுக்கு மட்டுமல்ல; இந்திய தேசத்திற்கே நஷ்டம் என்று வருத்தப்பட்டார்.
Add Comment