10. அணு உலை ஆக்கிரமிப்பு
ரஷ்யாவின் எண்ணெய் வளத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். போரிஸ் யெல்ஸின் பதவி விலகி, விளாதிமிர் புதின் ஆட்சிக்கு வந்தபோது அவருக்கு இருந்த சவால்கள் சிறிதல்ல. எந்த வளமும் இல்லாததொரு தேசமென்றால் சிக்கலே இல்லை. ஏழை நாடு என்று போர்ட் மாட்டிக்கொண்டு, யாரையாவது அல்லது எல்லோரையும் எதிர்பார்த்துக் கையேந்தி வாழ்ந்து விடலாம். ரஷ்யாவில் இல்லாததே இல்லை. இயற்கை வளம், மனித வளம் தொடங்கி எந்த வளத்துக்கும் குறைவில்லை. பிரச்னை, எதுவும் சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதே. கம்யூனிசம், எண்பதாண்டுக் காலமாக அது உண்டாக்கியிருந்த மோசமான விளைவுகள், மக்களுக்கு அரசின் மீதிருந்த சந்தேகங்கள், அவநம்பிக்கை, உச்சக்கட்ட சுரண்டல்கள், பதுக்கல்கள் அனைத்துமே சரி செய்துவிடக் கூடியவைதான். ஆனால் ஒரு நாளில் நடக்காது. ஒரு ஆட்சிக்காலம் போதுமா என்றால் போதாது. நாட்டைக் குட்டிச்சுவராக்க எடுத்துக்கொண்ட காலத்தில் சரி பாதியாவது மீண்டும் கட்டியெழுப்பவும் தேவைப்படும் அல்லவா?
Add Comment