11. மோதல்
மோதிலால் நேருவின் கவலையெல்லாம் ஒன்றுதான். கடல் கடந்து சென்று படித்துக்கொண்டிருக்கும் மகனின் சுதந்திரமான எண்ண ஓட்டம், இந்திய அரசியல் சூழ்நிலையில் தனது மிதவாதப் போக்குக்கு ஏற்ற வகையில் அமையுமா? எங்காவது நேரெதிர் நிலைபாடு எடுத்து விட்டான் என்றால் என்ன செய்வது?
இது ஒரு பெருங்கவலை என்றால் மோதிலால் நேருவுக்கு வேறு விதமான பிரச்னைகளும் இருந்தன. எல்லாம் காங்கிரஸ் தொடர்பானவைதான்.
காங்கிரஸ் கட்சிக்குள்ளே மிதவாதிகள், அ-மிதவாதிகள் இரு தரப்பினருக்கும் இடையிலான இடைவெளி கருத்து வேறுபாடு என்ற அளவிலிருந்து அ-மிதவாதிகள் தங்கள் சார்புப் பத்திரிகைகள் மூலமாக மிதவாதத் தலைவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தும் அளவுக்கு அதிகரித்துக்கொண்டிருந்தது. மிதவாதத் தலைவர்களிலும் அதீத மிதவாதப் போக்கினைக் கடைபிடித்த மோதிலால் நேருவை அ-மிதவாதிகள் சும்மா விடுவார்களா என்ன? மோதிலால் நேரு, மதன் மோகன் மாளவியா, சுந்தர்லால் போன்ற தலைவர்களை அ-மிதவாதிகள் குறிவைத்துத் தாக்குதல் நடத்தினார்கள். இதெல்லாம், மோதிலால் நேரு செல்வாக்குடன் விளங்கிய அலகாபாத் பிராந்தியத்திலேயே நடந்தன.
Add Comment