ராகுல் காந்தி இந்தியா திரும்பினார்
மேற்படிப்பை முடித்து விட்டு லண்டனில் வேலை செய்து கொண்டிருந்த ராகுல் காந்தி 2002 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். இந்தியாவில் தொழில் நுட்பம் சார்ந்த அவுட்சோர்சிங் பணிகள் அசுரத்தனமான வளர்ச்சியிலிருந்தன. மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களின் பார்வை இந்தியாவின் மீது இருந்தது. குறைந்த செலவில் விரைவாக வேலையைக் கொடுத்துப் பெற்றுக்கொள்வதற்கு இந்தியா தான் சிறந்த இடமாக இருந்தது. ராகுல் காந்தியும் BackOps என்னும் நிறுவனத்தை மும்பையில் தொடங்கினார். இது, பொறியியல் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த அவுட்சோர்சிங் நிறுவனம். வெறும் எட்டு பணியாளர்களைக் கொண்டே இயங்கிக் கொண்டிருந்தது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த ஆலோசனை தருகிற வேலையைச் செய்து வந்தது. அந்த நிறுவனத்தின் நான்கு இயக்குநர்களில் ஒருவராகப் பணியாற்றினார் ராகுல். குடும்ப நண்பர் மனோஜ் முட்டு, முன்னாள் மத்திய அமைச்சர் ரமேஷ்வர் தாக்கூரின் மகன் அணில் தாக்கூர் ஆகிய இருவரும் இயக்குநர்களாக இருந்தனர். டெல்லியைச் சேர்ந்த ரன்வீர் சின்ஹா நிறுவனத்தின் நான்காவது இயக்குநர். இவர் மார்ச் 2006ஆம் ஆண்டு சொந்தக் காரணங்களுக்காகப் பணியிலிருந்து விலகிக் கொண்டார்.
Add Comment