- காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்
ஆங்கிலத்தில்: கிரிகரி ரெபஸ்ஸா, ஜே. எஸ். பெர்ன்ஸ்டைன்
தமிழில் ஆர். சிவகுமார்
மணற்பாங்கான பாறைகளால் ஆன அதிர்வுறும் சுரங்க வழியிலிருந்து புகைவண்டி வெளிவந்தது; சீராக அமைந்த, முடிவே இல்லாத வாழைத் தோட்டங்களைக் கடக்க ஆரம்பித்தது; காற்று ஈரமாக மாறியது; அவர்களால் கடற்காற்றை உணர முடியவில்லை. மூச்சுத் திணறவைக்கும் முழு வேகத்தில் பெட்டியின் ஜன்னல் வழியாக புகை வந்தது. பசும் வாழைத்தார்கள் ஏற்றப்பட்ட மாட்டு வண்டிகள். தண்டவாளங்களுக்கு இணையாகச் செல்லும் குறுகியபாதையில் போய்க் கொண்டிருந்தன. பாதைக்கு அப்பால், விவசாயம் செய்யப்படாமல் அங்கங்கே இருந்த நிலப்பகுதியில் மின்விசிறிகள் உள்ள அலுவலகங்களும் காரை பூசாத செங்கற்களாலான கட்டடங்களும் இருந்தன; பனை மரங்களுக்கும் ரோஜாச் செடிகளுக்கும் இடையே நாற்காலிகளும் சிறிய வெள்ளை மேஜைகளும் உள்ள மாடிவீடுகள் இருந்தன. காலை பதினோரு மணி; வெப்பம் இன்னும் ஆரம்பிக்கவில்லை.
Add Comment