குர்த்தாவின் கைகள் இரண்டையும் ஒரே அளவில் இருக்கும்படியாக, நான்கு விரற்கடை அகலத்தில் பட்டையாக மடக்கி மடக்கி முழங்கை முட்டிக்கு மேல் ஏற்றி விட்டால், இலக்கியச் சிந்தனை போன்ற கூட்டங்களில் கேள்வி கேட்க கம்பீரமாக இருக்கிறது என்று ஆரம்பித்த பழக்கத்தில் அன்று மெனக்கெட்டது வம்பாகப் போயிற்று.
ரிஸ்வாச் கட்டிக்கலையா என்று கேட்டாள் அம்மா.
வழில எங்கையோ விழுந்துடுச்சி என்று அலட்சியமாய் சொல்லிவைத்தான்.
என்னடா இப்படிச் சொல்றே. இப்பதான வாங்கினது. எவ்ளோ ஆசைப்பட்டு வாங்கினே.
எபே. அதுக்கென்ன இப்ப. போனது போச்சினு விடுவியா. சும்மா ரோதன பண்ணிக்கிட்டு…
சள்ளென்று விழுந்து அம்மாவை சமாளித்தான். அடுத்து அவள் வேறு எதையாவது ஆரம்பிக்கும் முன்னால் வெளியில் ஓடிவிடுவதே உத்தமம் என்று சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
Add Comment