மாரியோ பெனதெத்தீ (Mario Benedetti)
ஸ்பானிய மூலத்திலிருந்து ஆங்கிலத்தில்: ஜெரால்ட் ப்ரௌன் (Gerald Brown)
தமிழில்: ஆர். சிவகுமார்
1920களிலிருந்து மாறாமல் ஒரே பட்ஜெட்* எங்கள் அலுவலகத்தில் அமலில் இருந்து வருகிறது. அதாவது, எங்களில் பெரும்பான்மையோர் நிலநூலோடும் பின்னக் கணக்குகளோடும் போராடிக்கொண்டிருந்த காலத்திலிருந்தே ஒரே பட்ஜெட்தான் இருந்து வருகிறது. எங்கள் அலுவலகத் தலைவர், செய்வதற்கு அதிக வேலை இல்லாதபோது, எங்கள் மேஜைகளில் ஏதாவது ஒன்றின்மீது மிகவும் உரிமையோடு உட்கார்ந்துகொண்டு, அவருடைய அலுவலகத்தலைவர் – அப்போது எங்கள் அலுவலகத் தலைவர் தலைமை எழுத்தராக இருந்தாராம்-அந்தப் பழைய, அற்புதமான ஒரு நாளில் அவரிடம் சொன்ன வார்த்தைகளை நினைவுகூர்வார். அலுவலகத் தலைவர் அவருடைய தோளைத் தட்டிச் சொன்னாராம்: “அருமைப் பையனே! நமக்கு ஒரு புதிய பட்ஜெட் வரப்போகிறது.’’ சம்பள உயர்வின் மூலம் எத்தனை புதிய சட்டைகள் வாங்கலாம் என்று முன்கூட்டியே கணக்குப் போட்டுவிட்டவனின் திருப்தியான சிரிப்போடு அவருடைய அலுவலகத் தலைவர் அந்த வார்த்தைகளைக் கூறினாராம். இந்நிகழ்ச்சியை எங்களிடம் கூறும்போது அலுவலகத் தலைவர் அழுக்கு ஏதும் இல்லாத மிகச் சுத்தமான வெள்ளை நிறக் காலுறைகள் தன் கால்சட்டைக்குக் கீழே தெரிய கால்களை ஆட்டிக் கொண்டிருப்பார்.
Add Comment