முர்டேஷ்வர் கட்டுரை தனியாகப் படித்திருப்பீர்கள். தென் கர்நாடகத்தில் இம்மாதிரி மொத்தம் ஏழு முக்கியமான திருத்தலங்கள் உள்ளன. உடுப்பி, ஹொரநாடு, ஷ்ரிங்கேரி, தர்மஸ்தலா, முர்டேஷ்வர், கொல்லூர் மற்றும் சுப்ரமணியா என இந்த ஏழையும் சேர்த்து அங்கே சப்த க்ஷேத்திரங்கள் என்பார்கள்.
இவையனைத்துமே மங்களூரு மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் அமைந்துள்ளவை. இவற்றைப் பார்க்க வேண்டுமெனில் மூன்று நாட்கள் பிரயாணமாக வைத்துக்கொள்வது நல்லது. மங்களூரு இறங்கி அங்கு பிரசித்தியான மங்களாதேவியைத் தரிசித்துவிட்டு ஒரு மங்களூரு மீல்ஸ் (இனிப்பு சாம்பார், ரசம், அவியல் பிரதானம்) அல்லது மங்களூர் வெண்ணெய் மசால் தோசை சாப்பிட்டு விட்டுக் காரில் ஏறினால் இரண்டு மணி நேரப் பயணத்தில் குக்கே சுப்ரமண்யாவை அடையலாம். வழியெங்கும் வளைவுகள். சாலைப் பராமரிப்பு வேலைகள் நடப்பதால் கொஞ்சம் ஊர்ந்து செல்லும் டிராபிக் எனச் சலனம் இல்லாமல் செல்லும். குக்கே சுப்பிரமணியஸ்வாமி கோவில் குமாரதாரா நதிக்கரையில் அமைந்துள்ளது. சர்ப்ப இனத்தைக் காக்க வேண்டி நாகராஜா வாசுகி, தவமிருந்து சுப்ரமண்யரை வேண்டிக்கொண்டதாக ஐதீகம். எனவே சர்ப்பதோஷ நிவாரணத்திற்கு இது புகழ் பெற்றது. வியாழன் தோறும் நடைபெறும் சர்ப்ப சாந்தி பூஜையில் கலந்து கொள்ள கூட்டம் அதிகமாக இருக்கும்.
Add Comment