44 மூடுபனி
டிசம்பர் மாத இரவு 12 மணிக்குக் கரையில் நின்றபடி, ‘நீருக்கு மேலே பஞ்சுப்பொதிபோல மேகம் அசையாமல் நின்றுகொண்டிருக்க, ஏரி உயிருள்ள ஓவியம்போல இருக்கிறது’ என்று அவன் சொன்னான்.
சிரித்தபடி, ‘அது மேகமில்லே மிஸ்ட்’ என்றார் பிரம்மராஜன்.
நானே இந்த நேரத்துல இப்பதான் லேக்கை பாக்கறேன் என்றான் ட்டி.எம். நந்தலாலா.
மூவரும் கொஞ்சநேரம் ஒன்றும் பேசாமல், கிட்டத்தட்ட உறைந்துபோயிருந்த அந்த ஏரியைப்போலவே அமைதியாக நின்றிருந்தனர்.
பஸ் வளைந்தும் நெளிந்தும் மேலே ஏற ஏற, ஏண்டா இங்கே வந்தோம் என்று நொந்துகொள்ளும்படியாக, எந்த நிமிஷமும் வாந்தி எடுத்துவிடப்போகிறோம் என்பதைப்போல, வயிற்றைக் குமட்டிக்கொண்டு வந்தது.
வசதியின்மை காரணமாக, பள்ளிக்காலத்தில் நல்லது கெட்டதுக்கு என்று மெட்ராஸுக்கு வருவதே அபூர்வம் என்றாலும் வரும்போதெல்லாம் தவறாமல் வந்துகொண்டு இருந்தென்னவோ வாந்திதான். டீஸல் வாடையே தனக்கு ஆகாது, அலர்ஜி என்பது தெரியவரவே பெரியவனாகவேண்டி இருந்தது.
Add Comment