நம்மூரில் தரைப்பாலங்கள் மழையால் தண்ணீரில் மூழ்கினால் கயிறுகட்டியோ அல்லது தோணி, அண்டா எனக் கிடைப்பதை வைத்தோ ஆற்றைக் கடந்து பள்ளி செல்லும் மாணவர்களை அவ்வப்போது செய்திகளில் பார்த்திருப்போம். வெனிசுவேலா நாட்டில், மாணவர்கள் ட்ரோசாஸ் எனப்படும் ஆபத்தான சட்டவிரோதப் பாதைகளில் நாடு கடந்து பள்ளிக்குப் போகிறார்கள்.
தன் தாய் மற்றும் சகோதரனுடன் இப்படி நாடு தாண்டி பள்ளிக்குச் செல்கிறவர்களில் மெலனியும் ஒருவர். தூரத்தில் தெரியும் தேசிய பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிகள் அவளுக்கு பயத்தை ஏற்படுத்துகின்றன. ஆனாலும் மெலனிக்கு பள்ளிக்கூடம் போவதும் புதியதாக கற்றுக்கொள்வதும் பிடித்திருக்கிறது. அவளுடைய தாய், “எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று என்னை நானே நம்ப வைத்துக்கொள்ள முயல்கிறேன். சில சமயங்களில் உணர்ச்சிப்பெருக்கால் தவிக்கிறேன். இரண்டு குழந்தைகளுடன் மேற்கொள்ளும் இந்தப் பயணம் எளிதானதல்ல. தாயாக எனக்கு அதிகப் பொறுப்புகள் இருக்கிறது.” என்கிறார்.
துணைக்கு பெற்றோர் இல்லாமல் தனியாகப் பயணிக்கும் மாணவர்களும் உள்ளார்கள். 13 வயது மார்செல்லோ தன் தம்பியுடன் காட்டுவழியில் சில மணிநேரம் பயணித்து பள்ளி செல்கிறான். அவன் ஊரில் பாடங்கள் நடத்தப்படுவதில்லை. “கொலம்பியப் பள்ளிக்கு வந்து பாடம் கற்க எனக்குப் பிடித்திருக்கிறது” என்கிறான் மார்செல்லோ. ஆபத்தான வழியில் வரும் துணிவு எல்லாருக்கும் இருப்பதில்லை. இவனுடைய வகுப்புத் தோழன் “சில நாள்கள் வருவேன். சில நாட்கள் விடுப்பு எடுத்து கொள்வேன்” என்கிறான். இந்த வழியின் ஆபத்துகளைப் பெற்றோரும் மாணவர்களும் உணர்ந்துதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு வழி இல்லை.
Add Comment