பொன்னியின் செல்வன் பூங்குழலி கதாபாத்திரம் ஓட்டும் பாய்மரப்படகு ஞாபகம் இருக்கிறதா? பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்றின் விசையைக் கொண்டியங்கும் அற்புதக் கண்டுபிடிப்பு (படகைச் சொன்னேன்). நிலக்கரி, எரிவாயு போன்று சுற்றுசூழலுக்குப் பங்கமின்றி, இயற்கையோடு இணைந்த தொழில்நுட்பம் கூடியது. இவற்றின் பக்கம் மும்முரமாய்த் திரும்புகிறது மனிதகுலம் .
போர் என்றாலே பதட்டம், குண்டுகள், சூழ்ச்சி, அழிவு, அழுகை என எதிர்மறை விளைவுகளையே நாம் கண்டதும் கேட்டதும் உண்டு. முதல்முறையாகக் கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கவிருக்கிறது. தன்னுடைய துணிச்சலால் உலகையே திரும்பி பார்க்கவைத்த சுற்றுச்சூழல் ஆர்வலர், கிரெட்டா துன்பெர்க். இவரது உரையால் முடியாதது, உக்ரைன் ரஷ்யா போரால் இன்று துளிர் விட்டிருக்கிறது.
“ஐரோப்பாவின் மிகப்பெரிய பசுமை மின் நிலையத்தை உருவாக்குவோம்” என்று உறுதியளித்திருக்கிறார்கள், ஒன்பது ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள். பெல்ஜியத் தலைநகரில் ஒன்றுகூடிய இவர்களோடு, காற்றாலை நிறுவனங்களின் தலைவர்களும் பங்கேற்றிருப்பது கவனத்தை ஈர்க்கிறது. வடமேற்கு ஐரோப்பாவின் வட கடலோரம் காற்றாலைகள் அமைப்பது; இவற்றின் உற்பத்தியைத் திட்டமிடப்பட்ட விநியோகச் சங்கிலி மூலம், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மலிவான விலையில் கொண்டு சேர்ப்பது; ரஷ்யா போன்ற பிறநாடுகளை ஆற்றலுக்காகச் சாராமல், தற்சார்பு நிலையை அடைவது, “மேட் இன் ஐரோப்பா” – இவைதான் பிரதானத் தீர்மானங்கள்.
Add Comment