அவங்க நல்லவங்களா? கெட்டவங்களா?
ஆள் பாதி ஆடை பாதி என்பது பழமொழி. ஆடை இல்லையேல் அவன் முழு மனிதன் கிடையாது. உண்மையில் மனிதர்களை முழுமையாக்குவதில் முக்கியப் பங்கு ஆடைகளை விட நுண்ணுயிரிகளுக்கே அதிகம். ஆம். ஆடை இல்லாமல் கூட உயிர் வாழும் மனிதர்கள் இப்புவியில் உண்டு. நுண்ணுயிரிகள் இல்லாமல் எம்மனிதராலும் ஒருநாள்கூட உயிருடன் இருக்க முடியாது. காலம் காலமாக, உலகம் முழுவதிலும் நாம் நுண்ணுயிரிகளை வில்லனைப் போலவே சித்தரித்து வந்திருக்கின்றோம். நுண்ணுயிரிகள் என்றால் நோய் பரப்புபவை என்றுதான் நம்மில் பெரும்பாலோனோருக்குத் தெரியும். இதையும் தாண்டிச் சிலரே இந்த நுண்ணுயிரிகள் உணவுப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுவதை அறிந்து வைத்திருப்பர். ஆனால் நாம் ஆரோக்கியமாக இருக்கத் தேவையான முக்கியக் காரணிகளில் ஒன்று நமது உடலிலேயே வாழும் பல கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் என்பது பலருக்குத் தெரிவதில்லை. நமது உடலில் மனிதனுக்கே உரிய செல்களைவிடப் பலமடங்கு அதிக எண்ணிக்கையில் நுண்ணுயிரிகள் வாழ்கின்றன.
Add Comment