தி கேரளா ஸ்டோரி – விமரிசனம்
தி கேரளா ஸ்டோரி படத்தின் நாயகி பெரும்பாலான காட்சிகளில் காதுக்கு மேலே ஒரு முழம் பூவை வைத்துக்கொண்டு வருகிறார். அவர் அப்பாவி அல்லது மதராஸி அல்லது இந்து என்பதற்கான குறியீடாக இருக்கலாம். படத்தைப் பார்த்தால் அந்தப் பூ பார்வையாளர்கள் காதுக்கு இடம் மாறிவிடும். இந்தப் படம் முஸ்லீம்களுக்கு எதிராக இருக்கிறது என்பது மிகத் தட்டையான புரிதல். ஒட்டுமொத்த தென்னிந்தியப் பெண்களை மிக மட்டமாக சித்தரிக்கிறது படம். தமிழ்ப்படங்களில் வரும் லூசுப் பெண் ஹீரோயின் கேரக்டர்கள் எல்லாம் இவர்களிடம் போட்டிக்கே வரமுடியாது. வேற லெவல் முட்டாள்கள் இவர்கள்.
நர்சிங் கல்லூரியில் பயில வருகிறார்கள் மூன்று பெண்கள். இரண்டு பேர் இந்துக்கள். ஒரு பெண் கிறித்துவர். இவர்களுடன் ஹாஸ்டலில் தங்கி இருக்கும் நான்காவாது பெண் முஸ்லீம். இந்த முஸ்லீம் பெண் பெரிய தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பவர். குண்டு வைக்கும் தீவிரவாதிகள் இல்லை இவர்கள். வயசுப் பையன்களை வேலைக்கு வைத்து பெண்களைக் காதலிக்க வைத்து மதமாற்றும் தீவிரவாதிகள். முஸ்லீம் பெண் தொழுவார், ஓட்டலுக்குத் தோழிகளுடன் சென்று சாப்பிடுவார். ஆனால் மற்ற மூன்று பெண்களும் முஸ்லீம் பெண்ணின் உறவுக்காரப் பையன்களுடன் டிஸ்கோவில் நடனமாடுவது, குடிப்பது, மால்களில் சுற்றுவது என்று இருப்பார்கள். ஒருநாள் சில பொறுக்கிகள் இந்தப் பெண்களின் டாப்ஸ் கையைக் கிழித்து சிலீவ்லெஸ் ஆக்கி அவமானப்படுத்திவிடுகிறார்கள். இந்தப் பெண்கள் ஹிஜாப் அணிந்தால் இந்த நிலை வராது என்பார் முஸ்லீம் தோழி. ஹிஜாப் அணிந்தால் பள்ளிக்கே போக முடியாது என்ற நிலையில் இந்த இந்துப் பெண்கள் மாலுக்குச் சுதந்திரமாகச் செல்வதற்காக அதை மாட்டிக்கொள்கிறார்கள்.
விமர்சனம் ஆழமானது. பொருள் பொதிந்தது. ப்ளூ சட்டை மாறன் தொனியில் படித்தேன். சிரிப்பு தான் வந்தது. மதப்பிரிவினை மட்டுமின்றி தெற்கு வடக்கு என எண்திசைகளிலும் துண்டாடாமல் விட மாட்டார்கள் போல. மிகவும் அச்சமானதாக தோன்றும் வருங்காலம்