நாட்டின் அனைத்து ஆண்களும், பெண்களும் அங்கீகரிக்கப்பட்ட 28 சிகை அலங்காரங்களில் ஒன்றைத் தவிர வேறொன்றை கிராஃபிக்ஸில்கூட நினைத்தும் பார்க்கக்கூடாது, மைக்ரோவேவ் அடுப்பைப் பயன்படுத்தினால் சிறைத்தண்டனை. சொந்ததேச இசை தவிர வேறொன்றைக் கேட்டால் மரண தண்டனை. அரசாங்க அலுவலகத்தில் தூங்கினால் தூக்குத் தண்டனை, ஒரு குற்றவாளியின் தண்டனை நிரூபிக்கப்பட்டால் அவரின் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, மாமா, மாமி, பெண் கொடுத்தோர், எடுத்தோர் எல்லாருக்கும் சேர்த்தே தண்டனை உண்டு. 17 வயதுக்கு மேற்பட்ட எல்லாருக்கும் வாக்குரிமை உண்டு, கட்டாயம் வாக்களிக்க வேண்டும். ஆனால் அரசர் மட்டுமே போட்டியிடுவார், அவருக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும்.
என்னடா இது இம்சை அரசனின் இன்னொரு எடிஷனா என்று தோன்றலாம். வேறெங்கே? வட கொரியாதான்.
ஆனால் இதெல்லாம் அந்நாட்டு மக்களை மட்டும் பாதிக்கிற சட்டங்கள். அதிபர் கிம் எப்போதும் உலகளாவிய தாக்கத்தை மட்டுமே உத்தேசிப்பவர் அல்லவா?
வடகொரியா இப்போது ஓர் உளவு செயற்கைக்கோளைத் தயாரித்திருக்கிறது. பொதுவான உளவுப் பணிகளுக்கும் பிற நாட்டு ராணுவ ரகசியங்களை அறிந்து கொள்வதற்குமாக தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த செயற்கைக் கோள் நாட்டின் ராணுவத்தைப் பலப்படுத்தும் மிக முக்கியமான முயற்சி என அதிபர் கிம் வர்ணித்திருக்கிறார்.
2021-ல் ராணுவத்தை நவீனப்படுத்தும் ஐந்தாண்டுத் திட்டம் ஒன்றை நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தினார் கிம். படிப்படியாக அதன் செயல்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் அவர் அறிவித்திருக்கும் 2023 விஷ்லிஸ்ட்தான் இம்சை அரசனின் பிரம்மாஸ்திரமாக உலகால் பதைபதைப்போடு பார்க்கப்படுகிறது.
Add Comment