இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூபாய் நோட்டில் வைத்த சிப்ஸ் நமுத்துப் போனதால் திரும்பப் பெறப்படவில்லை என்றும் சேர்த்தே அறிவித்திருக்கலாம் ரிசர்வ் வங்கி. பொதுமக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கொடுப்பதை நிறுத்துமாறு வங்கிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. கடைக்காரர்கள் இந்த நோட்டு வாங்குவதை மறுக்கக் கூடாது. அவர்கள் வங்கியில் இந்த நோட்டுகளை டெபாசிட் செய்யலாம். தினமும் அதிகபட்சம் 20000 ரூபாய் வரை மட்டுமே மாற்றிக்கொள்ள அனுமதி. அதாவது 10 நோட்டுகள். தினசரி வங்கி நடவடிக்கைகளில் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு இந்த ஏற்பாடு. மே மாதம் 23 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பதட்டப்படாமல் இருக்க இந்தக் கால அவகாசம். அதுசரி… கடைசியாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டைப் பார்த்த பொதுஜனத்தைச் சல்லடை போட்டுத்தான் தேடவேண்டும்.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை முழுமையை நோக்கி நகர்ந்துள்ளது என்கிறார். “2016-ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போதே நானும் இன்னும் பலரும் இது ஒரு தவறான முடிவு என்பதைச் சுட்டிக்காட்டினோம். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு உடனடியாவே 500 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தனர். 2 ஆயிரம் ரூபாய் எப்போதுமே கருப்புப் பணத்தை பதுக்குவோருக்குத்தான் உதவும். 2 ஆயிரம் ரூபாய் நோட்டு ஒருபோதும் நல்ல பணமாகச் செயல்பட முடியாது. ரிசர்வ் வங்கி ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகம் செய்தாலும் வியப்பதற்கில்லை” என்று தெரிவித்துள்ளார்.
Add Comment