உலகம் செயலி மயமாகிவிட்டது. தொட்டதற்கெல்லாம் செயலிகள். செயலியின்றிச் செயலில்லை. ஆனால் கணக்குப் போட்டுப் பார்த்தீர்கள் என்றால் ஒரு சில நூறு செயலிகளைத்தான் மொத்த உலகமும் திரும்பத் திரும்பப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. உண்மையில் பல லட்சக்கணக்கான செயலிகள் அண்ட வெளியெங்கும் நிறைந்திருக்கின்றன. நாம் பயன்படுத்தத் தவறும், ஆனால் முக்கியமான சில செயலிகளை இங்கே பார்ப்போம்.
எழுதுவதற்கு:
ஒரு புத்தகமோ அல்லது கட்டுரையோ எழுத வேண்டுமென்றால் மைக்ரோசாப்ட் வேர்ட் அல்லது கூகுள் டாக்ஸ் தான் வேண்டும் என்றில்லை. அவற்றைத் தாண்டி சில சிறப்புச் செயலிகள் இருக்கின்ற. உதாரணமாக ஸ்கரிவேனர் (Scrivener). இதைக் கொண்டு சிறிய பத்தியோ, பல பக்கங்கள் கொண்ட ஓர் அத்தியாயமோ அல்லது ஒரே ஒரு வரியோ எப்போது தோன்றுகிறதோ உடனே அதைக் கோப்புக்குள் எங்கே வேண்டுமானாலும் எழுதிவிடலாம். பிறகு அதற்கான சரியான இடத்தில் நகர்த்திவிடலாம் – வெட்டி ஒட்டுவதைவிட இது சுலபமானது. ஒரு புத்தகத்தை வரிசையாக எழுதிக் கொண்டு வரலாம் அல்லது அதன் சுருக்கத்தை, புறவடிவத்தை மட்டும் எழுதிவிட்டு, பிறகு ஒவ்வொரு பாகமாகத் தோன்றும் வரிசையில் எழுதலாம். ஒரு புத்தகத்தை எழுதும் போது பல நூறு தரவுகளைத் தேடிச் சேகரித்து ஆய்வு செய்து, படித்து எழுதுவோம். இந்தத் தரவுகளை, அவை படங்களாக இருக்கலாம், இணைய முகவரிகளாக இருக்கலாம், அல்லது பி.டி.எஃப். கோப்புகளாக இருக்கலாம், வேர்ட் ஃபைல்களாக இருக்கலாம், இவை எல்லாவற்றையும் எழுதும் புத்தகத்துடனே சேர்த்து ஒரே கோப்பில் வைக்கலாம். ஒரே இடத்தில் எல்லா விஷயங்களையும் தேடித் திறந்து படிப்பது எளிதாகும். இந்த ஸ்கரிவேனர் செயலியின் விலை சுமார் ஐயாயிரம் ரூபாய், இது மேக் ஓ.எஸ், விண்டோஸ் மற்றும் ஐபோன் இயங்குதளங்களில் கிடைக்கிறது.
Add Comment