51 வாழ்வும் ஆரம்ப வரிகளும்
‘மாயவரம் ஜங்ஷனில் இறங்கிச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பியபோது, வண்டியில் மூன்றாவது ஆத்மா ஒன்று என் தோல் பையையும் துணிப் பையையும் நடுவே நகர்த்தி, என் இடத்தில் உட்கார்ந்து பூரி உருளைக்கிழங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தது’னு அக்பர் சாஸ்திரிய ஆரம்பிப்பார் ஜானகிராமன். ஆரம்ப வரிலையே எவ்வளவு விஷயங்களைச் சொல்லி, கண்ணெதுர படம் மாதிரி காட்டிடறார்’
அதை ஆமோதிப்பதைப்போல முறுவலித்த சுந்தர ராமசாமி மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தது அவனுக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது.
இருவருமே, கொஞ்ச நேரம் எதுவும் பேசிக்கொள்ளாமல் அமைதியாய் இருந்தனர். ராமசாமியின் பார்வை தம் கையையே வெறித்தபடி இருக்க, வலக்கைச் சுட்டு விரல் கட்டிலில் எதையோ திரும்பத்திரும்ப எழுதிக்கொண்டு இருந்தது.
‘ஜானகிராமனைப் படிச்சுட்டு, அவர் காட்டற ஊரைப் பாத்துடணும்னு போனேன். பிளாட்பாரத்துல காலை எடுத்து வெச்ச அந்த நொடியே அவர் எழுத்துல தெரியற தஞ்சாவூர் அப்படியே ரெண்டா ஒடஞ்சுடுத்து’ என்று கட்டைவிரல் தள்ளி, தனியே வளைந்திருக்க, முறம்போல அகன்றிருந்த இரண்டு கைகளையும் இணைத்துப் பின் பிரித்துக் காட்டினார்.
‘வண்ணதாசன் முன்னுரைல கூட, யதார்த்தத்தின் மேல் கனவின் பனிப்படலத்தை விரித்த மிக வெற்றிகரமான கலைஞன் ஜானகிராமன்னு சொல்லியிருப்பீங்க’.
Add Comment