கடந்த வருடம் ஜூலை 9ம் தேதி அறுபத்தொன்பது இலட்சம் மக்களால் ஐம்பத்திரண்டு சதவீதப் பெரும்பான்மையுடன் தேர்வு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே நாட்டைவிட்டு ஓடிய போது அநாதையாகிப் போனது ராஜபக்சே குடும்பத் தொழிற்சாலை. பதினைந்து வருடங்களாக இத்தொழிற்சாலையை இயக்கப் பயன்படுத்தப்பட்ட இனவாதத் துறவிகளின் மோசமான பரப்புரைகள், போலியான தேசாபிமானம், மீடியாக்கள் மூலம் சிறுபான்மையினங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வெறுப்பரசியல் எல்லாம் கறை படிந்து பார்ப்போர், கேட்பாரற்றுப் போயின.
கொழும்பு காலி முகத்திடல் எழுச்சிக்குப் பின்னர், ராஜபக்சே தரப்பைத் தொடர்ந்து பதவியில் வைத்திருக்க ஒரு காலத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பிரசாரங்களைச் செய்த இக்குழுக்களை ஆப்பிரிக்கக் காடுகளில் நரமாமிசம் சாப்பிடும் காட்டுமிராண்டிகள் போன்று மக்கள் பார்க்கத் தொடங்கினார்கள். இவர்களது பழைய அறிக்கைகள் தூசு தட்டப்பட்டு சந்திக்கு இழுத்து வரப்பட்டன. இணையத்தளவாசிகள் தினமும் கழுவிக் கழுவி ஊற்றி தம் பொழுதைப் போக்கிக் கொண்டார்கள். வரிசைகளும், தட்டுப்பாடுகளும் அங்க அடையாளமாகிப் போய், நாடு பிச்சைப் பாத்திரம் ஏந்தியது பெரும் துன்பியல் நிகழ்வு என்றாலும், மக்கள் விழிப்புணர்வு அடைந்து தம்மை இத்தனை நாள் ஏமாற்றிப் பிழைத்த கும்பலுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தது மதவாத, இனவாத அரசியலுக்கு எதிரான பெரும் பாய்ச்சலாக நோக்கப்பட்டது. பஞ்சத்தால் விளைந்த ஒரேயொரு நன்மை இதுதான்.
Add Comment