53 மிதப்பு
டிரைவ்-இன் செல்ஃப் சர்வீசில் காபி வாங்கிக்கொண்டு வந்து, நடைவழியை ஒட்டி இருந்த மூன்று மேஜைகளில் காலியாக இருந்த நடு மேஜையில் உட்கார்ந்தான். மனம் பொங்கி வழிந்துகொண்டு இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல், பெரியமனுஷ தோரணையுடன் அமைதியாக இருக்க முயன்றான். அது அவன் இயல்பே இல்லை. மனத்தின் உணர்ச்சிகளை மறைக்கத் தெரியாத முகம் அவனுடையது.
‘என்னைய்யா. மறுபடியும் எங்கையோ போயிட்டேன்னாங்க வந்துட்டியா’ என்று சிநேகமாகச் சிரித்துக்கொண்டே வந்து எதிரில் அமர்ந்தான் ராஜன் சர்மா. ஈரோட்டிலிருந்து கிளம்பியது இவனுக்கு எப்படித் தெரிந்திருக்கும் என தோன்றியதைக் காட்டிக்கொள்ளாமல் அளந்து சிரித்துவைத்தான்.
‘எங்கையோ டிரான்ஸ்ஃபர்னு போனியே இன்னும் அங்கதான இருக்கே’.
ஆமாம் என்பதைப்போல, இவன் இதைத்தான் கேட்கிறானா என்று இசைவாகத் தலையை அசைத்துவைத்தான்.
டிரைவ்-இன் கூரைக்கு சிகரெட் புகையை அனுப்பியபடி, இவனுக்கு என்னவோ ஆகிவிட்டது என்பதைப்போல, அதற்குமேல் தொடராமல் அமைதியாகிவிட்டிருந்தான் ராஜன். அவனுக்கு, படம் பற்றிய ஆயிரம் கவலைகள். வெறித்த பார்வையுடன் யோசித்துக்கொண்டு இருக்கையில் விளக்கு பார்த்த கண் என்று சொல்லப்படுபவைபோல சற்றே ஒருபுறம் ஒதுங்கியிருக்கும்.
தம்முடைய இயல்பான கட்டுக்கோப்பை உதறிவிட்டு, அவரையும் அறியாமல் முகத்தில் வெளிப்படையாய் மகிழ்ச்சிப் பொங்க, சற்றே உரக்கப் பேசிக்கொண்டு இருந்தார். அறைக்கு வந்த கமலா மாமியிடம், ‘தெரியுமா, இவர் நகுலனைப் பாக்க திருவனந்தபுரம் போகலையாம். கன்யாகுமரியைக் கூட பாக்காம, மெட்ராஸுக்குத் திரும்பிப்போறார்’ என்று குதூகலத்துடன் குழந்தைபோலச் சொல்லிக்கொண்டிருந்தார் சுந்தர ராமசாமி.
Add Comment