21 வயது நிகிதா, முக்கிய முடிவு ஒன்றை அன்றிரவே எடுத்தாக வேண்டும். ஒன்று உக்ரைன் இராணுவத்தில் சேர்ந்து போர் வீரனாவது. மற்றொன்று அனைத்தையும் விட்டுவிட்டு பிரிட்டனுக்குச் செல்வது; அகதியாய். தேர்வு எதுவாயினும், இனி வாழ்க்கை மாறத்தான் போகிறது.
“வயலின் வாசித்த இந்தக் கைகளால், ஏ.கே.74 துப்பாக்கியேந்த முடியாது”, என்றதொரு கனத்த முடிவெடுத்தான். அகதியாய் நுழைந்தான் பிரிட்டனுக்குள். இன்றும் பல இராத்திரிகளில், கைகளில் முகத்தைப் பொதிந்து அழுகிறான். தாய்நாடும் வீடும் இன்னும் கனவே. லண்டன் இசைச் சங்கத்தின் (LPMAM) முயற்சிகளால், இவரைப் போன்ற 50 இசைக்கலைஞர்கள் லண்டனில் தஞ்சம் புகுந்தனர். படித்துக்கொண்டே இசையையும் தொடர்கிறார். உக்ரைன் கலாசாரத்தை வயலின் ஏந்திப் பரப்புகிறார் நிகிதா.
இவரைப் போலவே நேசித்தவைகளை விட்டு அகதிகளாகியோர் எட்டு மில்லியன் மக்கள். இன்னும் ஆறு மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தவர்கள். “24 பிப்ரவரி 2022 அன்று முடிவுற்றது என் வாழ்க்கை. இனி அது திரும்பாது”, என்கிறார் யூலியா. நேசித்த கணவரும், வீடும், வேலையும் தற்போது அங்கில்லை. இந்த பயங்கர நிஜத்தை ஏற்றுக்கொள்ளும் சக்தியும் இவருக்கு இன்னும் இல்லை.
மின் கட்டணம் செந்தில் பாலாஜி கைது செங்கோல் என நாம் பல விதங்களில் சுவாரசியமாய் வாழ்க்கையை நகர்த்த உக்ரைன் மக்களின் கேள்விக்குறியாக உள்ள எதிர்காலம் மனத்தைத் தொடுகிறது..பிரார்த்தனைகள் மட்டுமே இங்கிருந்து நாம் செய்யலாம்.