ஜீரோ டிகிரி பப்ளிஷிங்கின் எடிட்டர் காயத்ரி ஆர், பாரிஸுக்குச் சென்றிருக்கிறார். அவர் அங்கே சென்று இறங்கியபோதுதான் பதினேழு வயதுச் சிறுவன் ஒருவனை ஒரு போக்குவரத்துக் காவலர் சுட்டுக் கொன்றதும் தொடர்ந்து பாரிஸ் நகரமே பற்றியெரியத் தொடங்கியதும் நடந்திருக்கிறது. மெட்ராஸ் பேப்பர் வாசகர்களுக்காக பாரிஸ் நகரில் தாம் நேரில் கண்ட கலவரக் காட்சிகளை காயத்ரி இங்கே எழுதுகிறார்:
பாரிஸ் போகும் கனவு எனக்குப் பல வருடங்களாக இருந்தது. அது நனவாகி, ஷார்ல் த கால் விமான நிலையத்தில் இறங்கிய நேரத்தில் 17 வயது நாஹேல் என்ற சிறுவன் நான்தெர் என்ற பாரீஸின் புறநகர்ப் பகுதியில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தான்.
பாரிஸ் – 9ல் எங்களுக்குத் தந்திருந்த வீட்டிற்குச் சென்றதிலிருந்து இங்கே பதட்டமான சூழ்நிலைதான். மாலை வெளியே செல்லலாம் என்று பேருந்து நிறுத்துமிடத்திற்கு வந்தால், ஒரு வயதான பெண்மணி ‘வண்டி வராது, பேருந்தை எரிக்கிறார்கள்’ என்று உதட்டைப் பிதுக்கிவிட்டுச் சென்றார்.
நாங்கள் தங்கியிருந்த வீட்டின் சொந்தக்கார ஃபிரெஞ்சுப் பெண்மணியான 75 வயது கேரோல் கோபத்துடன் ‘இந்த நாட்டிற்கு என்ன ஆயிற்று?’ என்று வருத்தப்பட்டார்.
17 வயதான நாஹேல் என்ற அல்ஜீரிய வம்சாவழிச் சிறுவன் நான்தெர்ரில் டெலிவரி பையனாக வேலை செய்திருக்கிறான். அவ்வப்போது சிறு குற்றங்கள் செய்து போலீஸாரிடம் மாட்டி இருக்கிறான். அவன் தனது இரு நண்பர்களுடன் போக்குவரத்து விளக்குகளை மதிக்காமல் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது இரண்டு காவலர்கள் வழி மறித்து அவனுடைய ஓட்டுநர் உரிமத்தைக் கேட்டிருக்கின்றனர். அவன் வண்டியை ஓட்டத் தயாராகிறான் என்று தெரிந்துகொண்ட ஒரு போலீஸ்காரர் சுட்டு விடுவேன் என்று சொல்ல, அவன் கேட்காமல் வண்டியை நகர்த்த, அவர் சுடுவது அப்படியே கேமராவில் பதிவாகியிருக்கிறது.
horrific