ஆதியில் “செயற்கை நுண்ணறிவு” (Artificial Intelligence – AI) என்ற பதம் மனித குலத்துக்கு முதலில் அறிமுகமானபோது அது மிகுந்த ஆறுதலளிக்க கூடிய சொல்லாகத்தான் இருந்தது. வேலையில் உதவும் இன்னொரு கரம் போல, பொருள் அறிந்து கொள்ள உதவும் அகராதி போல, சொற்பிழைகளை நீக்கும் ஆசிரியர் போல, எளிய கணக்குகளைத் தீர்க்க உதவும் சூத்திரம் போல, வேலைகளை விரைந்து முடிக்க உதவும் இன்னொரு கருவி போல அது தனக்கு ஒரு நிழல் போல உதவும் என்றுதான் கணித்திருந்தான் மனிதன். ஆனால் அந்நிழல் வளர்ந்து, மெல்ல மெல்ல தன் மீதேறி தன்னையே மண்ணில் அழுத்தி வானுயர மேலுயர்ந்து நிற்கும் பூதமென மாறி நிற்கும் என்பதை நினைத்தும் பார்க்கவில்லை.
ஹாலிவுட்டின் தொலைக்காட்சி, திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் கடந்த இரண்டு மாதங்களாக ஒரு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். முதலில் அவர்களின் கோரிக்கைகளென்னவோ சம்பளத் தகராறாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் அது சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின்போது, நிர்வாகங்கள் எப்படி வருங்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் மூலமாக எளிதாகக் கதை, திரைக்கதை, வசன இத்யாதிகளை எழுதிவிட முடியும் என்றும், எப்படிக் குறைந்த செலவில் நிறைந்த சேகரங்களை வரவு வைக்க முடியும் என்று ஒரு தோராய மிரட்டல் தீக்குச்சியைக் கொளுத்திப்போட, அது இவர்களின் பய நெருப்பைப் பற்றவைத்து விட்டது.
ஏஐ-யினால் ஏற்படும் வேலை இழப்பைப் பற்றிப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கணினி அறிமுகமானபோதும் இப்படியான சலசலப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. பின்னர் அதுவே பலவிதமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியதும், எல்லா துறைகளிலும் சிறு கடைகளிலும் கூட கணினி நுழைந்ததும் மாறிவரும் மில்லெனிய யுகத்தின் கட்டாயத்தால் நடந்தது. போலவே, ஏஐயினால் அமெரிக்கக் கலைத்துறையினர் முன்னெடுத்திருக்கும் வேலைநிறுத்தம் , அதன் காரணங்கள், ஏஐ எதிர்காலத்தில் கொண்டுவரப்போகும் வேலைவாய்ப்புகள் என விரிவான தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது கட்டுரை.