33 நா.கதிரைவேற்பிள்ளை (21.12.1871 – 26.03.1907)
ஈழத்தில் பிறந்த பெருமகன் அவர். ஆனால் உயிரும் மூச்சும் தமிழாக இருந்தது. தமிழுக்குப் பணி செய்யும் ஆவலும் அதற்கான வாய்ப்புகளும் தமிழ்நாட்டிலேயே வாய்த்த நிலையில் தமிழ்நாட்டில்தான் தனது பணிகளைத் தொடங்கினார், தொடர்ந்தார். முதலவாவதாக அவர் செய்த பணியே மிகச் சிறந்த ஒரு பெரும்பணிதான்; ஆனால் வாழ்வின் விசித்திரம், அந்தப் பணி மட்டுமே அவரது பெயர் சொல்லும் முக்கிய ஆக்கமாக வேண்டும் என்று ஊழ் நினைத்து அவரை வெகு இளவயதில் காலம் கொண்டுசென்றது. எனினும் என்ன… இன்றளவும் அவரது தமிழகராதி அவரது பெயரை முன்னொட்டு வைத்துக் கொண்டுதான் வெளியிடப் பெறுகின்றது.
அகராதி வெளியிட்டது மட்டுமல்ல, தமிழின் அடையாளமாக விளங்கிய பெரும் அறிஞர்களுக்கு, அவர்களது மாணவப் பருவத்தில் ஆசிரியராக அமைந்து கற்றுக் கொடுத்த கடமைகளையும் செய்தவர் அவர். சதாவதானம் என்ற நூறு திறன்களைச் செய்து காட்டும் திறனைப் பெற்ற ஒருவராக விளங்கினார் அவர். மதுரையில் தோன்றிய நான்காம் தமிழ்ச்சங்கத்தின் புலவர்களுள் ஒருவராக இருந்து பணிசெய்தவர். தனது தமிழ்ப் பணிகளுக்காக ஓயாது பயணங்களை மேற்கொண்டவர். அந்தப் பயணங்களாலேயே அவரது உடல்நோவுற்றதும், காலமானதும் நிகழ்ந்தது.
Add Comment