நுண்ணுயிரிக் கொல்லி மருந்துகள்
நாம் உட்கொள்ளும் மருந்துகளை வேதியியல் ரீதியாகப் பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். முதலாவது சிறிய மூலக்கூறுகள் (Small molecules) இரண்டாவது பெரிய மூலக்கூறுகள் (Macromolecules). பெரும்பான்மையான நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் முதல் வகையினைச் சார்ந்தவை. இந்த இரண்டு வகை மூலக்கூறுகளும் தமக்கே உரித்தான சாதக பாதகங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாகச் சிறிய மூலக்கூறுகள் பெயருக்கேற்றாற் போலச் சிறிய அளவில் இருக்கும். இதனால் அவை எளிதாகக் குடலால் உறிஞ்சப்பட்டு இரத்த ஓட்ட மண்டலத்தினை அடையும். அதாவது இந்த வகை மருந்துகள் வாய் வழியாக எடுத்துக்கொள்ளத் தகுந்தவை. எனவே நோயாளிகள் தாங்களாகவே இவ்வகை மருந்துகளை வீட்டிலிருந்தபடியே எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இந்த மூலக்கூறுகள் சிறிய அளவில் இருப்பதால் ஒரு நுண்ணுயிரியுடன் வினைபுரியும் போது அந்த நுண்ணுயிரியினைச் சார்ந்த புரதத்தின் மிகச் சிறிய பரப்புடனே (Surface contact) தொடர்பில் இருக்கும். இதனால் நுண்ணுயிரியின் புரதம் சிறிய அளவில் தன்னை மாற்றிக்கொண்டாலே இந்த வகை மருந்துகளிடமிருந்து நுண்ணுயிரிகள் தம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும். நுண்ணுயிரிக் கொல்லி எதிர்ப்புத் திறனை (Anti-microbial resistance) நுண்ணுயிரிகள் பெறுவதற்கு இவ்வகை மருந்துகள் எளிதில் வழிவகைச் செய்துவிடுகின்றன.
Add Comment