மேற்கே காந்திஜி கிழக்கே ராஜாஜி
காந்திஜியின் தண்டி உப்புச் சத்தியாக்கிரக யாத்திரைக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்துக் கொண்டே போனது. பிரிட்டிஷ் அரசாங்கத்தையே அது மிரள வைத்தது என்றால் அது மிகையில்லை. ஊர் எல்லை வரை வந்து வழியனுப்பி வைத்தவர்கள் ஒரு பக்கம் என்றால், ஒவ்வொரு ஊரிலும் இன்னும் பலர் அவரது யாத்திரையில் சேர்ந்துகொண்டார்கள்.
காந்திஜி தண்டிக்கு சுமார் 50 கி.மீ. முன்னால் இருக்கும் சூரத் நகரைச் சென்றடைந்தபோது, அவரை வரவேற்க முப்பதாயிரம் பேர் திரண்டிருந்ததாகவும், யாத்திரை தண்டியை அடைந்தபோது, அந்த சிறிய ஊரின் கடற்கரையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தார்கள் என்றும் அன்றைய பத்திரிகைகள் வியந்து எழுதின.
வழிநெடுக காந்திஜி உள்நாட்டு மற்றும் அயல்நாட்டுப் பத்திரிகைகளுக்கு ஏராளமான பேட்டிகள் அளித்தார். அந்நியப் பத்திரிகையாளர்கள் உபயத்தில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற பெயர் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பரவலாக உச்சரிக்கப்பட்டது.
தண்டி யாத்திரையைச் செய்திச் சுருளாக ஆவணப்படுத்த மும்பையைச் சேர்ந்த மூன்று திரைப்பட நிறுவனங்கள் தங்கள் படப்பிடிப்புக் குழுவினரை அனுப்பி இருந்தார்கள்.
Add Comment