59 சைக்கிள் பயணம்
வண்டி, அகலமாக நாற்சந்திபோலிருந்த பெருந்துறைக்கே அப்போதுதான் வந்திருந்தது. இன்னும் இருட்டக்கூட இல்லை. எதிரில் தெரிந்த சாலை ஏற்ற இறக்கங்களுடன் காற்றில் படபடக்கும் வேட்டியைப்போல இருந்தது. கிளம்பி ஒரு மணி நேரம் ஆகியிருந்தாலே அதிகம். அதற்குள்ளாகவே கால் வலிக்கத் தொடங்கிவிட்டது. தப்புசெய்துவிட்டோமோ; வந்திருக்கக்கூடாதோ; திரும்பிப் போய்விடலாமா என்றுகூடத் தோன்றிற்று.
பட்டாளத்துச் சீருடைபோல தோள்களில் பட்டை, பாக்கெட்டுகளுக்கு பித்தளை பட்டன்கள் வைத்த மூடி என்று இருந்த, நடைபாதையில் வாங்கிய மிலிட்டரி பச்சை ஜீன்ஸ் ஜாக்கெட்டுடன், சைக்கிளிலேயே கோயம்பத்தூர் போகிறேன் என தடபுடலாகக் கிளம்பிவிட்டு, இருபது கிலோமீட்டரியே திரும்பிப்போனால் அதைவிடக் கேவலம் வேறில்லை. அப்படி நடந்துவிட்டால் அதற்குப் பிறகு அவனை அவனேகூட மதிக்கமுடியுமா.
அவ்வளவு பெரிய சந்திப்பு, போகிற வருகிற வண்டிகள் என போக்குவரத்தே இல்லாமல் அமைதியாக இருந்தது,மெட்ராஸ்காரனான அவனுக்குப் புதிதாய் இருந்தது. ஓரமாய் இருந்த பெட்டிக்கடையில் வண்டியை நிறுத்தி, ஜாக்கெட்டின் உள் பாக்கெட்டில் இருந்த எலுமிச்சைப் பழத்தைக் கொடுத்து சோடாவும் உப்பும் போட்டு அதைப் பிழிந்துகொடுக்கச் சொன்னான்.
சைக்கிளில் கோயம்பத்தூர் என்றதும் வெளிறிப்போய், ‘உங்களால சும்மாவே இருக்கமுடியாதா’ என்று ஆரம்பித்த டிஓஎஸ், அவன் பிடிவாதத்தைக் கண்டு சொன்ன அறிவுரைதான் கையோடு எலுமிச்சையாக வந்திருந்தது.
காவியில்போன இரண்டுமுறையும் ஏகத்துக்கு நடந்தாயிற்று. பிறந்தது முதல் மெட்ராஸுக்கு வரும்வரை பாண்டிச்சேரியில் இருந்த பத்து வருடங்களும் நடையோநடை என்று நடந்தே தீர்த்தாயிற்று.
Add Comment