உலகம் உண்ணும் உணவுப் பொருள்களில் பெரும்பாலும் இருப்பது மாவுச் சத்து. இத்தாலியர் உணவில் மைதா அல்லது கோதுமை மாவில் செய்த பாஸ்தா. அமெரிக்கர்களின் சாண்ட்விச்சில் பிரெட். வட இந்தியர்களின் உணவில் கோதுமையால் செய்யப்பட்ட சப்பாத்தி. சீனர்கள், இந்தியர்கள், தாய்லாந்து வியட்நாமியரின் உணவில் அரிசியால் செய்யப்பட்ட சோறு. பெயரும் வடிவமும் வேறானாலும் அடிப்படை மாவுச் சத்து.
தானியங்களில் இன்றளவும் மிக அதிகமாக மக்களால் உட்கொள்ளப்படுவது அரிசிதான். எனவே, மிக அதிக மக்கள் தொகை உள்ள சீனா, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் முக்கிய உணவாக அரிசி இருப்பதால், இவை இரண்டுமே அரிசிப் பயன்பாட்டில் முதல் இரண்டு இடங்களையும், தாய்லாந்து, வங்காளதேசம் அடுத்த இடங்களையும் பெறுகிறார்கள்.
இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் நடந்த பசுமைப் புரட்சிக்குப் பின், தன் நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தபின் எஞ்சிய அரிசி அதிகமாக, இந்தியா அரிசியை மிக அதிக அளவில் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தது. இப்போது, உலகிலேயே மிக அதிக அளவில் அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடாக, ஆண்டொன்றுக்கு 2,15,00,000 மெட்ரிக் டன் அரிசியை 140 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதில் அபுதாபி, சவுதி அரேபியா, அமெரிக்கா, நேபாளம், கனடா ஆகிய நாடுகளும் அடங்கும். இதில் அமெரிக்காவிற்கு மட்டும் 207 மில்லியன் டாலர் பெறுமானம் உள்ள பாஸ்மதி அரிசி உள்ளிட்ட பல அரிசி வகைகளை ஏற்றுமதி செய்கிறது.
பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளை இறக்குமதி செய்வதில் முக்கிய நாடுகளாகக் கென்யா, நேபாளம், அங்கோலா, கேமரூன் கினியா ஆகியன உள்ளன.
Add Comment