பீதி, அது ஒன்று தான் அங்கிருந்த அத்தனை பேரிடமும் எஞ்சியிருந்த ஒரே உணர்வு. நேரமில்லை. யாராவது ஒருவரேனும் துணிந்து விவேகமாகவும் வேகமாகவும் இயங்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தாள் மரீனா. கைக்குக் கிட்டிய ஒரு தொலைபேசியிலிருந்து தன் உறவினரைத் தொடர்பு கொண்டு, அவர் மூலமாகத் தன் மாநிலத்தின் முதலமைச்சரிடம் பேசினாள். அதைத் தொடர்ந்து அவசரகால அடிப்படையில் அரசு இயங்கியது. ராஜதந்திர உறவுகள் மூலம் பல பேச்சுவார்த்தைகள் இரவு பகலாக நடந்தன.
அடுத்த நிமிடம் உயிர் பிழைத்து இருப்போமா? மானபங்கப்படுத்தப் படுவோமா? குடும்பத்தை மீண்டும் ஒருமுறை கண்ணால் காண்போமா?. எதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. அரசு கொடுத்த நம்பிக்கையில் அவர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றித் தீவிரவாதிகளுடன் விமான நிலையம் வரை பயணித்தனர். சுமார் இருபத்து மூன்று நாட்களுக்குப் பின்னர் சிறு கீறலும் இல்லாமல் அந்த நாற்பத்தாறு பெண் தாதிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுத் தத்தம் குடும்பத்துடன் இணைந்தனர்.
நான்கு வருடங்கள் கழிந்தன. 2014-இல் இந்தத் தாதிகள் தீவிரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட அதே சமயத்தில், முப்பத்தொன்பது இந்திய கட்டட ஊழியர்களும் ஐஎஸ்ஐஎஸ்-ஆல் சிறைப்பிடிக்கப்பட்டனர். அவர்கள் அத்தனை பேரும் கொல்லப்பட்டு விட்டனர் என்று 2018 மார்ச்சில் இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
‘கேரள நிலத்தையும் மக்களையும் முழுமையாகப் புரிந்து கொண்டவர் உம்மன் சாண்டி. ஆனால் அவர் தொட்டதெல்லாம் தேன் கூட்டில் கல்லெறிந்தது போல் ஆகிவிட்டது’ என ஜெயமோகன் எழுதியிருப்பார். வெளிநாட்டில் தவிக்கும் ஒரு சாமானியப் பெண்ணின் அழைப்புக்காக டெல்லி சென்று அழுத்தம் கொடுத்து அவர்களை மீட்டு வந்ததில் ஆரம்பித்து, அவர் அரசியலுக்கு வந்தது, ஒரே சட்டமன்றத் தொகுதியிலேயே இறுதிவரை நின்று வென்றது, சூரிய சக்தியில் இயங்கும் மெட்ரோ, ஏர்போர்ட் என அவரது சாதனைகளைப் பட்டியலிட்டு, இறுதியில் அவரது பூத உடலுக்கு ஒன்றரை நாட்கள் நின்று அஞ்சலி செலுத்தியது வரை விரிவாக நேர்த்தியாக இருந்தது கட்டுரை