35 வெ.சாமிநாத சர்மா (17.09.1895 – 07.01.1978)
அவரது வாழ்வு தொடங்கியதே பத்திரிகையாளராகத்தான். சிறிது குள்ளமான சிவந்த உருவம். இராசகோபாலாச்சாரி போல எப்போதும் மொட்டைத் தலை. கதரில் குப்பாயச் சட்டையும், வேட்டியும். சாயலில் திருவிக போன்ற தோற்றம். மாறாத புன்னகை. பார்த்தாலே துலங்கிவிடும் அறிஞர் என்றவாறான தோற்றப் பொலிவு கொண்டவர். அரசியல், இதழியல், படைப்பிலக்கியம், கடித இலக்கியம், மொழிபெயர்ப்பு, தற்கால உரைநடை என்று பல புலங்களில் எழுத்துக்களாலும் படைப்புகளாலும் தனது முத்திரையைப் பதித்தவர். தமிழில் இருபதுக்கும் மேற்பட்ட வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதிய அவர், தனது வாழ்க்கை வரலாற்றை எழுதியதில்லை என்பதும் ஒரு முரண். ஒரு நூல் தவிர, தான் எழுதிய எந்த நூல்களிலும் நான், எனது என்று தன்னை முன்னிலைப்படுத்தி அவர் எழுதியதில்லை; அந்த ஒரு நூலும் அவர் தனிப்பட்ட முறையில் தனது தோழருக்கு எழுதிய கடிதங்களிலிருந்து தொகுக்கப்பட்டு நூலானதால், அவ்வாறு அமைந்து போனது. அவரது ஒரு பயணநூல் வரலாற்றில் இந்தியத் தமிழர்களின் மாபெரும் துயர நிகழ்வொன்றை விவரிக்கும் சான்று நூலாக இன்றளவும் விளங்கும் சிறப்புடையது. அந்த நூல் பர்மாவழி நடைப்பயணம். அதனை எழுதிய வெங்களத்தூர் சாமிநாத சர்மா என்ற வெ.சாமிநாத சர்மாவே இந்த வார உயிருக்கு நேர் பகுதியின் நாயகர்.
Add Comment