ஆசியாவில் சீனாவுக்கு அடுத்ததாகப் பொருளாதாரத்தில் பெரும் பாய்ச்சலை நடத்திக் கொண்டிருந்த பங்களாதேஷுக்கு இது போதாத காலம். யார் கண்பட்டதோ தெரியவில்லை… வளர்ச்சி மதிப்பீடுகளும், எதிர்வு கூறப்பட்ட அசத்தல் புள்ளிவிபரங்களும் படிப்படியாய்க் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. 2026-ம் ஆம் ஆண்டளவில் குறைந்த வருமானம் பெறும் நாடுகளின் பட்டியலில் இருந்து தூக்கப்பட்டு, மத்திய தர வருமானமுடைய நாடு என்று ஐ.நா.சபையால் பட்டாபிஷேகம் சூட்டப்பட இருந்த தேசம், இன்று அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் திணறிப் போய் இருக்கிறது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, தொடர்ச்சியான மின்சாரத் தடை, கருத்துச் சுதந்திரம் மீதான அரசின் கிடுக்கிப் பிடி என்று மக்கள் ஆர்ப்பாட்டங்களுக்குக் கடந்த ஒரு வருடமாக எந்தப் பஞ்சமுமில்லை. இதனோடு சேர்ந்து பிரதமர் ஷேய்க் ஹசீனா பதவி விலகி இடைக்கால அரசை நியமித்துத் தேர்தலை நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகின்றன. அண்மையில் அப்படியொரு ஆர்ப்பாட்டம், பெரும் வன்முறையாக மாறியதில் ஒருவர் கொல்லப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சட்டத்தின் ஆட்சியை நிறுவுமாறு பங்களாதேஷில் இருக்கும் வெளிநாட்டுத் தூதரகங்கள் ஹசீனா அரசுக்குத் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், தன் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அமெரிக்கா சதி செய்வதாகவும் அதற்கு மேற்கத்தேய ஊடகங்கள் எரிபொருள் ஊற்றிக் கொண்டிருப்பதாகவும் பிரதமர் ஷேய்க் ஹசீனா அதிரடிக் குற்றப் பத்திரம் ஒன்றை வாசிக்கத் தொடங்கி இருக்கிறார்.
Goosebumps writing! Excellent piece Zafar!