பெருமாள், சிவன், பிள்ளையார், முருகன் கோயில்கள் இருப்பது போல பிரம்மாவுக்குத் தனிக் கோயில்கள் கிடையாது. அதற்கு காரணம் ஈசனின் சாபம்.
நெருப்புத் தூணாய் நின்ற சிவபெருமானின் அடியையும் முடியையும் காண விஷ்ணுவும், பிரம்மனும் புறப்பட்டனர். அடியைக் காண முடியவில்லை என மஹாவிஷ்ணு ஒத்துக்கொண்டார். ஆனால் முடியைக் கண்டுவிட்டதாக பிரம்ம தேவர் பொய் சொல்லிவிட சிவபெருமான் கோபம் கொண்டு ‘பூலோகத்தில் உமக்குத் தனியாகக் கோயிலே கிடையாது’ எனச் சாபமிட்டார்.
இதேபோல மற்றொரு புராணக்கதை உண்டு. ஈசனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் எனும் ஐந்து திருமுகங்கள் உண்டு. பிரம்ம தேவருக்கும் முன்பு ஐந்து முகங்கள் இருந்தனவாம். இதனால் ஈசனுக்கு ஈடானவன் என பிரம்மன் கர்வம் கொண்டிருந்தார். ஒருமுறை பார்வதி தேவி ஈசன் என்று நினைத்து பிரம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டு விடவே பிரம்ம தேவரின் கர்வம் மேலும் அதிகமானது.
அவரது அகங்காரத்தை அடக்க ஐந்து முகங்களில் ஒன்றைக் கிள்ளியெறிந்தார் சிவபிரான். அன்றிலிருந்து நான்முகன் ஆனார் பிரம்மன். ஆனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்துக் கொண்டது. கிள்ளிய தலையின் கபாலம் உதிராமல் ஈசனின் கையிலேயே ஒட்டிக்கொண்டது.
Add Comment