36 ரா.பி.சேதுப்பிள்ளை (02.03.1896 – 25.04.1961)
கம்ப இராமாயணத்தில் கம்பர் ‘சொல்லின் செல்வன்’ என்ற அடைமொழியை ஒரு பாத்திரத்துக்குக் கொடுத்தார். கம்ப காப்பியத்தின் வழி அப்பாத்திரத்தின் சொல்வன்மைக்கும், அறிவு மேன்மைக்கும் பொருத்தமானதே அந்த அடைமொழி. கம்பனின் படைப்பான அனுமனே அந்தப் பாத்திரம். எந்தவொரு பேச்சிலும், சொல்வது ஒரு சொல்லாக இருந்தாலும், அந்தச் சொல்லுக்கு மாற்றுச்சொல்லே இல்லை என்ற அளவுக்குச் சீர்மை பொருந்திய சொல்லைப் பயன்படுத்தும் சொல்வன்மை அனுமனுக்கு இருந்ததாகக் காப்பியம் முழுதும் அப்பாத்திரம் படைக்கப் பட்டிருப்பதாலேயே அனுமனுக்கு அந்தப் பெயர். அப்பாத்திரத்தின் சீர்மை போலவே இருபதாம் நூற்றாண்டின் தமிழறிஞர்களில் ஒருவரும் உரைநடைப் பேச்சில்கூட எதுகையும் மோனையும் துள்ளி விளையாடும் அளவுக்குச் சொற்சிலம்பம் ஆடும் வல்லமை பெற்றிருந்தார். மேடைப்பேச்சு அல்லது சொற்பொழிவுகளில் அவ்வாறு எதுகை, மோனைத் திறத்தோடு பேசும் வல்லமை அவர் காலத்துக்கு முன்னர் கண்டறியாதது. அத்தகைய சிறந்த பேச்சாற்றல் நிரம்பியவராக இருந்ததால் அவருக்கும், கம்பன் காப்பியத்தில் வழங்கிய ‘சொல்லின் செல்வர்’ என்ற அடைமொழி 1950’ஆம் ஆண்டு வழங்கப்பெற்றது.
அந்த அடைமொழிப் பட்டத்தை வழங்கியது தமிழுக்கு அருந்தொண்டுகள் பல செய்திருந்த, செய்து கொண்டிருக்கும் தருமை ஆதீனம் என்ற தருமபுர ஆதீனம். அந்தச் சிறப்புக்குச் சொந்தக்காரர் இரா.பி.சேதுப்பிள்ளை. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் அமர்ந்து சுமார் இருபத்தைந்து ஆண்டு காலம் அரும்பணியாற்றியவர் அவர். கவியோகி சுத்தானந்த பாரதி, ‘செந்தமிழுக்கு சேதுப்பிள்ளை’ என்று அவரைப் பாராட்டி மகிழ்ந்தார். பத்திரிக்கையாளரும், நூலாசிரியருமான சோமலெ ‘சேதுப்பிள்ளையின் தமிழ்நடை, ஆங்கில ஆசிரியர் அட்சனின் (Hudson) நடையைப் போன்ற சிறப்பு வாய்ந்தது’ என்று பாராட்டுவார். அவரது ‘தமிழின்பம்’ என்ற நூலுக்கு, ஒன்றிய அரசின் சாகித்திய அகாதமி விருது 1954’ஆம் ஆண்டு வழங்கப்பெற்றது. தமிழ்நூல் ஒன்றுக்கு, சாகித்திய அகாதமி வழங்கிய முதல் விருது இது. 1957’ஆம் ஆண்டு சென்னைப் பல்கலை அவரது அரிய தமிழ்ப் பணியைப் பாராட்டி அவருக்கு டி.லிட் என்ற முனைவர் | இலக்கியப் பேரறிஞர் பட்டத்தை அளித்தது. தகுதியால் வழக்கறிஞர், தமிழறிஞர், எழுத்தாளர், மேடைப் பேச்சாளர், நூலாசிரியர், அதோடு திருக்குறளில் இளம் வயதிலேயே ஆழ்ந்த ஆய்வறிவு கொண்டவர் எனப் பன்முகச் சிறப்புடைய இரா.பி.சேதுப்பிள்ளை அவர்களே இந்த வார உயிருக்கு நேர் பகுதியின் நாயகர்.
Add Comment