2022 ஜூலை மாதத்தில் இங்கிலாந்தில் வெப்ப நிலை முதல் தடவையாக 40°C க்கு மேலாகச் சென்று இதுவரை பதிவு செய்யப்பட்ட வெப்ப நிலைகளில் அதிகூடியதாக வரலாறு படைத்ததாக ஒரு கட்டுரை மெட்ராஸ் பேப்பரில் வெளியிட்டோம். இந்த ஆண்டு இதுவரை இங்கிலாந்தில் அந்தளவுக்கு வெப்பநிலை ஏறவில்லை. ஆனாலும் இவ்வாண்டு ஜூன் மாதம் சராசரி வெப்ப நிலை இதற்கு முந்திய ஆண்டுகளைவிட உயர்வானதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் என்ன வருமோ எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சென்ற ஆண்டில் பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, போர்த்துக்கல், கிரீஸ் போன்ற நாடுகளில் சென்ற ஆண்டில் இங்கிலாந்தைவிட அதிகமான வெப்பநிலைகளைப் பதிவு செய்ததோடு பல காட்டுத் தீக்களும் பரவின. ஆனால் இந்த ஆண்டு பல ஐரோப்பிய நாடுகளைக் கதிகலங்க வைக்கும்படியான ஒரு வெப்ப அலை வந்தது. இது இயல்பு வாழ்க்கையினை மிகவும் பாதிக்கும் ஜூலை மாதமாக அமைந்தது. அது மட்டுமல்லாது கோடைக் காலத்தில் சுற்றுலாப் பயணிகளினால் நிரம்பி வழியும் இந்நாடுகளில் இவ்வெப்ப அலையினால் அதற்கும் பாதகம் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பா மட்டுமல்லாது அமெரிக்காவிலும் கடுமையான வெப்ப அலையினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோடைக் காலத்தில் வெப்பநிலை அதிகரிப்பது இயல்பானதே. ஆனாலும் அண்மைக்காலங்களில் இவ்வெப்பநிலை அதிகரிப்பு வழக்கத்தை விட மிகவும் அதிகமாக இருப்பதால் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் நிலைமையை வந்தடைந்துள்ளது. 2023 ஜூலை மாதத்தில் பல ஐரோப்பிய நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் வெப்பநிலை ஐம்பது பாகை செல்சியஸை அண்மித்தன. அரபு நாடுகளில் வசிப்போருக்கு இது என்ன வெப்பம் என்று சொல்லத் தோன்றலாம். ஆனாலும் அவர்களது நாட்டில் அதற்கேற்ப வாழும் வழிமுறைகளுக்குப் பழக்கப்பட்டவர்கள். ஐரோப்பிய நாடுகள் இப்படியான வெப்பநிலைக்குப் பழக்கப்படாததால் அதன் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. அத்துடன் பாலைவனங்களில் காட்டுத் தீ உருவாகும் சாத்தியங்களும் இல்லை. அதற்கு மாறாக ஐரோப்பாவில் காட்டுத் தீ உருவாகி அது மக்கள் வாழும் பகுதிகளை அடையும் போது அதனால் ஏற்படும் பாதிப்பு சாதாரணமானதல்ல.
Add Comment