இனிப்பு, கசப்பு, புளிப்பு, உப்பு, உமாமி. இந்த ஐந்தும்தான் இன்றைய உணவுத் தொழில்நுட்பத்தின் அடிப்படைச் சுவைகள். மஞ்சள் என்கிற அடிப்படை வர்ணத்தை வேறு எந்த வர்ணக்கலவை கொண்டும் உருவாக்க முடியாதது போல இந்த அடிப்படைச் சுவைகளை வேறு எந்தச் சுவைகள் கொண்டும் உருவாக்க முடியாது. இதில் இந்த ஐந்தாவது ஆளான ‘உமாமி’ கிட்டத்தட்ட உறைப்புக்குச் சமனானது. உமாமி, கடும் உறைப்பாக, கண்ணீர் வரவழைக்கும் அளவு அசௌகரியமானதாக இருக்காது. எச்சில் ஊறவைக்கும் தன்மைக்கு உதாரணமாகவும், ‘திருப்தி’ என்பதை விளக்குவதுமான, நாவின் ருசி அரும்புகளைக் குதூகலப்படுத்தும் ஒருவித ஃப்ளேவர். சோயா சாஸ், ஆயிஸ்டர் சாஸ், காளான் போன்றவற்றில் இயற்கையாகவே அமைந்துள்ளது. ஒரே வார்த்தையில் சொல்வதானால் ‘அஜினமோட்டோ ‘ சுவையூட்டியில் அமைந்துள்ள அந்த கலக்கல் சுவை!
உமாமியை முழுமையாக அனுபவிப்பதற்கு ஏற்றதொரு இடம் இருக்கிறது. கொழும்பு பன்னிரண்டில் அமைந்துள்ள ‘புதுக்கடை’. புதுக்கடை ஒரு தனிக்கடை கிடையாது. மொத்தமாக ஒரு நீண்ட தெரு. ஆட்களை இழுக்கும் அற்புதத் தெரு.
அந்த வீதியின் இருமருங்கிலும் பளிச்சென்று வீற்றிருக்கும் உணவுப் பொருட்களும் , அவற்றின் வித்தியாசமான பெயர்ப் பதாகைகளும் புதுக்கடை ‘ஸ்ட்ரீட் ஃபுட்’ ராஜ்யம் என்பதை உணர்த்தி விடும். இரவு ஆரம்பமாகும் போது தெரு உயிர் பெற்று எழுந்து வரும்.
மாலை கடந்து காரில் போனால் வண்டியை நிறுத்துவதற்கு பக்கத்தில் இடம் கிடைக்காது. பைக்கில் போனால், பைக்கை பாதை முடியும் இடத்தில் ஒரு மூலையில் போட்டு விட்டு, ஹெல்மட்டைக் கையோடு எடுத்துக் கொண்டு போக வேண்டும். எல்லாவற்றையும் விட இலகுவான மார்க்கம், ஆட்டோ. தெருவின் ஆரம்பப் புள்ளியில் இறங்கிக் கொண்டு திருப்பி அனுப்பி விடலாம். பொடி நடையாக அந்தத் தனி உலகிற்குள் நுழைந்து வரலாம்.
Add Comment