2011ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜி20 மாநாடு நடந்து கொண்டிருந்தது. அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் சாவகாசமாய்ப் பேசிக் கொண்டு கொண்டிருந்தார், பிரான்ஸ் அதிபர் நிகலஸ் சார்கோஸி. “மிஸ்டர் ஒபாமா ! இந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு இருக்கிறாரே.. பெரும் கபடவேடதாரி.. எனக்கு என்னவோ அவர் நடவடிக்கைகள் எதுவுமே சரியாய்ப்படவில்லை. அந்த ஆளைச் சுத்தமாய்ப் பிடிக்கவுமில்லை.” என்றார் சார்கோஸி. ‘உங்களுக்கு அவரைப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் எனக்கு அவருடன் தினமும் கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டி இருக்கிறதே மிஸ்டர் சார்கோஸி’ என்றார் ஒபாமா… பிரான்ஸ் அதிபர் சார்கோஸிக்கு அப்போது கட்டம் சரியில்லை. அவரது மைக் திடீர் என்று உயிர் பெற்றது.. முழு உலகமும் இந்த உரையாடலைக் கேட்டு ரசித்தது.
ஜி20ல் நடந்ததைப் போன்ற ஒரு சம்பவம் கடந்த வருடம் நவம்பரிலும் நடந்தது. பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கத் தயாராகிக் கொண்டிருந்த பிரதமர் நெத்தன்யாகுவின் கரங்களுக்கு உத்தியோகபூர்வமாய்ப் பூரண அதிகாரங்களை வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரேலின் ஜனாதிபதி ஐசாக் “இதோ பாருங்கள், இஸ்ரேல் சரித்திரத்தில் இப்படி ஒரு தீவிர மதவாத சக்திகள் சேர்ந்து ஒரு வலதுசாரிக் கூட்டணியை நிறுவியதே இல்லை. நீங்கள் எல்லோரும் இந்த தேசத்தை என்ன செய்யப் போவீர்களோ என்று பதட்டமாய் இருக்கிறது. முழு உலகமும் உங்களைப் பார்த்துக் கவலைப்படுகிறது.” என்றார். மைக் ஆஃப் ஆனதாக நினைத்துக் கொண்டு தான் ஐசாக் புலம்பித் தீர்த்திருந்தார். பெஞ்சமின் நெத்தன்யாகுவுக்கோ எப்போதுமே மைக் மேல் அதிர்ஷ்டம். அது ஆன் ஆனது. குடியரசுத் தலைவரின் நிலைப்பாட்டைச் சர்வதேச நாடுகள் புரிந்து கொண்டன. அபத்தமான ஆட்சி அமையப் போகிறது என்று சர்வதேசத்திற்குக் கிடைத்த முதல் சமிக்ஞை இதுதான்.
மைக் ஆன் ஆக இருந்தால் என்ன, ஆஃப் ஆக இருந்தால் என்ன.. முன்னாள் பிரான்ஸ் அதிபரும், இந்நாள் இஸ்ரேல் குடியரசுத் தலைவரும் சொன்னது எத்தனை நிஜம் என்பதை நெத்தன்யாகு அரசு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் லட்சணத்தில் இருந்து புரிந்து கொள்வது ஒன்றும் சிரமமில்லை.
Well Written
நன்றி ஸபார்.