மனித குலத்தின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு மொழி. எண்ணங்களின் ஊற்றுக்கண்ணாகவும் மொழியே உள்ளது. உடலாற்றல் என்னும் அளவை வைத்துப் பார்த்தால் மனிதனை விடப் பன்மடங்கு திறன் வாய்ந்த விலங்குகள் பல உள்ளன. ஆயினும் மனிதன் அவைகளையெல்லாம் விட உயரக் காரணம் அவன் கண்டறிந்த கருவிகள். மொழி இக்கருவிகளுள் முதன்மையானது.
மொழி என்றாலே மனிதர்களின் மொழி என்று மட்டும் தான் இருந்தது. பின்னர் கணினி மொழிகள் இவற்றுக்குப் போட்டியாக வந்து சேர்ந்தன.
மனிதர்கள் கணினியுடன் பேச உதவுபவையே கணினி மொழிகள். சரியாகச் சொல்ல வேண்டுமானால் நிரல் மொழிகள். ப்ரோகிராமிங் லாங்குவேஜஸ். கணினி மொழிகள் மூலம் ஒரு செயலைச் செய்ய நிரல் எழுதுவதை ப்ரோகிராமிங் என்கின்றனர். நிரலாக்கம். கோடிங் என்றும் சொல்லலாம்.
மனிதர்களுக்கு எண்ணற்ற மொழிகள் இருப்பது போலக் கணினி மொழிகளுக்கும் கணக்கே இல்லை. ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன.
கணினி மொழிகள் கடந்து வந்துள்ள பாதை மிக நீண்டது. சுவாரசியமானதும்கூட. ஆரம்பத்தில் இம்மொழியில் இருந்த எழுத்துகள் இரண்டே இரண்டு தான். 0 மற்றும் 1. ஆனால் இன்று நம்மிடம் இருக்கும் கணினி மொழிகள் பண்பட்டவை. முன்பிருந்த மொழிகளை ஒப்பிடும்போது இவை எளிதானவை.
இப்போதெல்லாம் கோடிங் செய்யக் கற்றுக்கொள்வது பரவலாகியுள்ளது.
Add Comment