“என் விரல் நகங்களை ஒவ்வொன்றாகப் பிடுங்கி எடுக்கும்போது, வலியும் தாங்க முடியாதபடி அதிகரித்துக் கொண்டே போனது.” கண்கள் கலங்கிவிட, பேசுவதைச் சில வினாடிகள் நிறுத்துகிறார் மினென்கோ. “அப்போது எனக்கிருந்த ஒரே ஆசை, இறந்துபோன என் கணவருடன் சீக்கிரமாகச் சென்றுசேர வேண்டும் என்பதே.”
உக்ரைன் இராணுவ வீரர் ஒலெக்சியின் பெருமைக்குரிய மனைவி. போரின் முதல் நாளே, வீரமரணம் அடைந்தவர் ஒலெக்சி. கெர்சோன் நகரின் ஆன்டோனிவ்ஸ்கி பாலத்தை, எதிரிகளிடமிருந்து காக்கப் போராடியவர். இவரது மனைவி இன்னும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார். ரஷ்யப்படையின் சித்திரவதைகளால் உண்டான நடுக்கத்தில் இருந்து மீண்டுவர.
விசாரணை என்ற பெயரில், மீண்டும் மீண்டும் காவலில் வைக்கப்பட்டார் மினென்கோ. ஒவ்வொருமுறையும் வகைவகையாய் சித்திரவதைகள். தலைமீது பாரம் அழுத்த, அடிகள் விழும். மூச்சு விட முடியாது, உங்களுக்கு நடக்கும் எதையும் தடுக்க முடியாது, என்று நினைவு கூர்கிறார். “நான் என்னை நடைப்பிணமாக உணர்ந்தேன்.” என்ற ஒற்றை வரியில் நடந்ததை நமக்கு உணர்த்துகிறார்.
இன்னும் தீரவில்லை ரணங்கள். “நான் ஒத்துழைக்க மாட்டேன் எனத் தெரிந்தபின், என் வீட்டு அடுப்பிலேயே தண்ணீர் காய்ச்சினார்கள். கைகளைப் பின்னிழுக்க முயன்றும், என் இடது கையில், கொதிக்கும் சுடுதண்ணீரை ஊற்றினார்கள்,” என்று இன்னும் ஆறாத அவர் கைகளையும், இராணுவ உடையில் கம்பீரமாகச் சிரிக்கும் கணவரின் புகைப்படத்தையும் நமக்குக் காண்பிக்கிறார்.
Add Comment