இந்த வாரம் சனிக்கிழமை, ஆகஸ்ட் ஐந்தாம் தேதி பாகிஸ்தானிய அரசியலில் ஒரு புதிய திருப்பம். மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தேசிய நாயகனாகக் கருதப்பட்ட ஒருவர் இந்த வாரம் நீதி மன்றத்தினால் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுக் காவலர்களால் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் யார்? பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமருமாகிய் இம்ரான் கான் தான் அவர்.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றிரண்டாம் ஆண்டு முதல் முதலாக கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் வெற்றி கொண்ட பாகிஸ்தான் அணியின் தலைவனாக நாடு திரும்பிய போது அனைத்து மக்களாலும் ஒரு தேசிய நாயகனாக வரவேற்கப்பட்டார் இம்ரான் கான். பின்னர் அரசியலில் இறங்கி இரண்டாயிரத்துப் பதினெட்டாம் ஆண்டு நாட்டின் பிரதம மந்திரிப் பதவியையும் கைப்பற்றினார். ஆனால் இன்று இவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு குற்றவாளி.
மூன்று மாதங்களுக்கு முன்னார் மே மாதம் ஒன்பதாம் தேதியும் இவர் கைது செய்யப்பட்டுப் பின்னர் சில நாட்களில் விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மே மாதக் கைதினால் நாட்டில் பல குழப்பங்கள் ஏற்பட்டன. இதன் விளைவாக அவரது கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களில் ஆயிரத்திற்கும் மேலானோர் கைது செய்யப் பட்டார்கள். மூன்று மாதங்கள் கடந்த பின்னர் இம்முறை மீண்டும் இம்ரான் கான் கைது செய்யப் பட்ட போது இதுவரையில் ஒரு பாரிய எதிர்ப்புகளும் நடைபெற்றதாகத் தகவல்கள் வெளிவரவில்லை. கைது செய்யப்படப் போவதை அவர் எதிர்பார்த்தார். அதனால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் அவர் வெளியிட்ட ஒரு காணொளி அறிக்கையில் தனது ஆதரவாளர்களிடம் எதிர்ப்புத் தெரிவியுங்கள் என வேண்டுதல் விடுத்திருந்தார். அவ்வேண்டுதலினால் இதுவரை ஒரு பலனும் கிடைத்தது போலத் தெரியவில்லை. இம்ரான் கானுக்கு ஆதரவு குறைந்து விட்டதா? அல்லது மூன்று மாதங்களுக்கு முன்னர் எதிர்ப்புத் தெரிவித்ததன் பலனை அனுபவித்தோர் இது போதும் என்று அமைதியாகி விட்டார்களா என்பது தெரியவில்லை.
Add Comment