நைஜர், இன்று உலகத்தில் அதிகமான ஊடகங்களின் தலைப்புச் செய்தியை ஆக்கிரமித்த ஒரு தேசம். மிகச் சுருக்கமாய் அடையாளப்படுத்தினால் பாவப்பட்ட மக்கள் வாழும் நாடுகளில் ஒன்று அது. காரணம் அங்கே சனத்தொகையில் நாற்பத்து மூன்று சதவீதமானோர் வறுமையில் துவள்கிறார்கள். அதுவும் இருபது வீதமானாருக்கு ஒருவேளை சாப்பிடுவதே திண்டாட்டமான ஒன்று. இப்படி வறுமை, ஊழல், சுகாதாரக் கேடுகள் என்று ஆப்பிரிக்காவிற்கே உரித்தான சொத்துக்களுடன் தட்டுத்தடுமாறியபடி நீந்திக் கொண்ட்டிருந்தது நைஜர். இரண்டு வாரங்களுக்கு முன்பு ராணுவம், ஆப்பிரிக்காவிற்கே உரித்தான மற்றொரு கலாசாரமான ராணுவப் புரட்சியை மேற்கொள்ள, உலகம் எங்கும் பேசுபொருளாகிப் போனது.
உலக அரசியலில் எங்குதான் புரட்சி இல்லை? இதுவே பாகிஸ்தானாய் இருந்தால், துருக்கியாய் இருந்தால், பர்மாவாய் இருந்தால் யாரும் இத்தனை நாள்களாய் விடாமல் கத்தி இருப்பார்களா? நைஜர் நைஜர் என்று ஏன் நை நை என்று அனைவரும் கதறுகிறார்கள்.? சோழியன் குடுமி மட்டுமல்ல, மேற்குலக மீடியாவும் அநாவசியமாய் ஆடாது. நைஜர், யுரேனியம் உற்பத்தியில் உலகத்தில் ஏழாம் இடத்திலும், தங்கம் உற்பத்தியில் ஆப்பிரிக்காவில் நான்காவது இடத்திலும் இருக்கிறது. கடந்த வருடம் ஐரோப்பாவிற்குத் தேவையான யுரேனியத்தின் இருபத்தி நான்கு சதவீதமும் நைஜர் உபயம். தங்க உற்பத்தி மட்டும் அறுபத்து மூன்று டன்கள். சூழலும் பூமி ஒருகணம் நின்றுவிட்டு மீண்டும் சுழல இக்காரணம் ஒன்றே போதாது ?
Add Comment